வரகரிசி புளிசாதம்
தேவையான பொருட்கள்:
வரகரிசி - முக்கால் கப்
புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு
மிளகாய் வற்றல் - 4
வேர்க்கடலை - சிறிது (விரும்பினால்)
கறிவேப்பிலை - 2 கொத்து
வெங்காயம் - பாதி
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு - தாளிக்க
பெருங்காயம் - சிறிது (விரும்பினால்)
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - சிறிது
செய்முறை:
வரகரிசியைக் களைந்து நீரை வடித்துவிட்டு வைக்கவும். ஒரு கப் நீரில் புளியை ஊறவைத்துக் கரைத்துக் கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, மிளகாய் வற்றல், வேர்க்கடலை மற்றும் பெருங்காயம் சேர்த்து சிவக்கவிடவும்.
அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கிவிட்டு புளி கரைசல்மற்றும் அரை கப் நீர் (முக்கால் கப் வரகரிசிக்கு ஒன்றரை கப் நீர் என்ற அளவில்) ஊற்றி உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.
நன்றாகக் கொதித்ததும் வரகரிசியைச் சேர்த்து கலந்துவிடவும். மீண்டும் கொதிக்கத் துவங்கியதும் அடுப்பை சிறு தீயில் வைத்து குக்கரை மூடி 10 நிமிடங்கள் வேக வைத்து இறக்கவும்.
ப்ரெஷர் அடங்கியதும் திறந்து கிளறிவிடவும். குழையாமல் உதிரியான சுவையான சத்தான வரகரிசி புளி சாதம் தயார்.