மாங்காய் சாதம் (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மாங்காய் - ஒன்று (துருவல் 1 1/4 கப்)

பச்சை மிளகாய் - 4

பெருங்காயத் தூள் - கால் தேக்கரண்டி

தேங்காய் துருவல் - கால் கப்

கடுகு - அரை தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி

எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி

கல் உப்பு - ஒரு மேசைக்கரண்டி

செய்முறை:

மாங்காயை தோல் சீவி காரட் துருவியால் துருவி வைத்துக் கொள்ளவும். தேங்காயை துருவிக் கொள்ளவும். .

மிக்ஸியில் முதலில் பச்சை மிளகாய், தேங்காய் துருவல், உப்பு மற்றும் பெருங்காயத் தூள் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த பிறகு அதனுடன் துருவிய மாங்காயை போட்டு அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் உளுத்தம் பருப்பு போட்டு ஒரு நிமிடம் சிவக்கவிடவும். பிறகு அதில் கறிவேப்பிலை போடவும்.

கறிவேப்பிலை பொரிந்தது அரைத்த விழுதை போட்டு 2 நிமிடம் பிரட்டவும்.

2 நிமிடம் கழித்து வாணலியில் ஒட்டாமல் கெட்டியாக வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி வைத்து விடவும்.

ஒரு அகலமான பாத்திரத்தில் சாதத்தை வடித்து எடுத்துக் கொள்ளவும். சாதத்தை குழைய விடாமல் சற்று பொலபொலவென்று வடித்து எடுத்துக் கொள்ளவும்.

அதன் பிறகு வடித்த சாதத்தில் செய்து வைத்திருக்கும் மாங்காய் கலவையை போட்டு கட்டி இல்லாமல் கிளறவும்.

மாங்காய் கலவை சாதத்துடன் ஒன்றாக சேரும்படி கிளறவும்.

குறிப்புகள்:

மாங்காயின் புளிப்பு அதிகமாக இருந்தால் 6 மிளகாய் போட்டுக் கொள்ளவும். சாதத்தை வடித்து வேண்டிய அளவு அரைத்த விழுது மற்றும் எண்ணெய் ஊற்றி பிசைந்து சாப்பிடலாம்.

இதற்கு உருளைக்கிழங்கு சிப்ஸ் சேர்த்து சாப்பிடலாம். எளிதில் செய்து விடலாம்.