மருந்து சோறு
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - 400 கிராம் (நாலு ஆழாக்கு)
நல்லெண்ணெய் ( அ) சன்ஃப்ளவர் எண்ணெய் - 125 கிராம்
தேங்காய் - ஒன்று
இஞ்சி பூண்டு விழுது - 75 கிராம்
மருந்து பொடி - 25 கிராம்
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
வெங்காயம் - 50 கிராம்
உளுந்து - 50 கிராம்
முட்டை - இரண்டு
வெல்லம் - சிறிது
உரித்த முழு பூண்டு - இரண்டு
உப்பு - தேவைக்கு
பட்டை - இரண்டு அங்குலத் துண்டு இரண்டு
கிராம்பு - நான்கு
ஏலம் - இரண்டு
பச்சை மிளகாய் - இரண்டு
செய்முறை:
தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
தேங்காய் துருவலை மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டி பிழிந்து பால் எடுத்துக் கொள்ளவும்.
அரிசி உளுந்து இரண்டையும் ஒன்றாக சேர்த்து ஊற வைக்கவும். மருந்து பொடியை கடைசியாக எடுக்கும் தண்ணீர் பாலில் கலந்து வைத்துக் கொள்ளவும். பூண்டை உரித்து வைக்கவும். முட்டையை உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடித்து வைக்கவும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, ஏலம், கிராம்பு போட்டு வெடிக்க விடவும். பிறகு அதில் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கவும்.
அதன் பிறகு கலக்கி வைத்திருக்கும் மருந்து பொடியை ஊற்றி மஞ்சள் தூள் உப்பு சேர்த்து கிளறி விடவும்.
கெட்டியான பாலுடன் ஒன்றுக்கு இரண்டு மடங்கு தண்ணீர் சேர்த்து ஊற்றி கொதிக்க விடவும்.
கொதி வந்ததும் அரிசியை போட்டு வெல்லம், உரித்து வைத்துள்ள பூண்டு ஆகியவற்றை போட்டு தீயை மிதமானதாக வைத்து வேக விடவும். முக்கால் பதம் வெந்ததும் தீயை குறைத்து வைத்து வேக விடவும்.
அடித்து வைத்திருக்கும் முட்டையை ஒரு முறை கலக்கி விட்டு சாதத்துடன் சேர்த்து கிளறி விடவும். மருந்து சாதத்தை நன்கு கிளறி விட்டு சிறிது நேரம் அப்படியே வேக விடவும்.
தம் போடும் கருவியை அடுப்பில் வைத்து தீயை சிம்மில் வைக்கவும். அதன் மேல் சாதத்தை வைத்து மூடி போட்டு அதற்கும் மேல் ஒரு கனமான பாத்திரம் அல்லது சூடான குழம்பு சட்டியை வைக்கவும்.
சாதம் நன்கு வெந்ததும் இறக்கி வைக்கவும்.