பீட்ரூட் புலாவ் (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி - 2 கப்

பீட்ரூட் - 1

கேரட், பீன்ஸ், பட்டாணி -‍ 1 க‌ப்

பெரிய வெங்காயம் - 1

பச்சை மிளகாய் -‍ 2

இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

மிள‌காய்த்தூள் - 1 தேக்க‌ர‌ண்டி

த‌னியாத்தூள் - 2 தேக்க‌ர‌ண்டி

தேங்காய்ப்பால் - 1 கப்

பிரியாணி இலை - 1

ப‌ட்டை, ஏல‌க்காய் -‍ 2 (அ) விருப்ப‌த்திற்கேற்ப‌

அன்னாசிப்பூ - 1

கிராம்பு - 4

எண்ணெய் - 2 தேக்க‌ர‌ண்டி

உப்பு - தேவையான‌ அள‌வு

பொதினா, கொத்தமல்லி தழை -‍ 1/4 கட்டு

செய்முறை:

அரிசியை த‌ண்ணீரில் போட்டு, க‌ழுவி நீரை கொட்டிவிட்டு, புதிய தண்ணீர் பிடித்து ஒரு 15 - 20 நிமிடங்கள் ஊறவிட‌வும்.

பீட்ரூட்டை தோல் சீவிவிட்டு சிறிய ச‌துர வடிவ துண்டுகளாக நறுக்கி வைக்கவும். கேர‌ட், பீன்ஸையும் பொடியாக நறுக்கி வைக்க‌வும். வெங்காய‌த்தை மெல்லிய‌ துண்டுக‌ளாகளாகவும், ப‌ச்சை மிள‌காயையை நீளவாகில் கீறியும் வைக்க‌வும்.

குக்கரில் எண்ணெய்விட்டு, அது காய்ந்த‌‌தும், ம‌சாலா பொருட்க‌ள் எல்லாவ‌ற்றையும் ஒவ்வொன்றாக‌ சேர்க்க‌வும். பிற‌கு ந‌றுக்கி வைத்த வெங்காயம், ப‌ச்சை மிள‌காய் போட்டு வ‌த‌க்க‌வும். வெங்காய‌ம் கொஞ்ச‌ம் நிற‌ம் மாறி வ‌ரும்போது, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து மேலும் 5 நிமிட‌ங்க‌ள் வ‌த‌க்க‌வும். அடுத்து அரிந்து வைத்த‌ காய்க‌றிக‌ள், ப‌ட்டாணி சேர்த்து, கூட‌வே, அல‌சி எடுத்த‌ பொதினா, கொத்த‌ம‌ல்லி த‌ழையை சேர்க்க‌வும்.

சிறிது நேரம் இதை வதக்கியப்பிறகு, மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்து சிறிது வ‌த‌க்கி, பிற‌கு 1 க‌ப் தேங்காய்ப்பாலையும், கூட‌ 3 க‌ப் த‌ண்ணீரையும் அளந்து சேர்க்க‌வும். (அரிசி:த‌ண்ணீர் அள‌வு, 1:2 என‌ இருக்க‌வேண்டும்.)

எல்லாம் சேர்ந்து தளதளவென கொதித்து வரும்போது, குக்க‌ரை மூடி, லேசாக ஆவி வ‌ரும்போது வெயிட் போட்டு, இர‌ண்டு விசில் விட்டு இற‌க்கிவிட‌வும்.

ஆவி அட‌ங்கிய‌தும், குக்க‌ரை திறந்து, சாதம் உடையாமல் மிருதுவாக‌ க‌லந்து விட‌வும்.

குறிப்புகள்:

வெங்காய‌ தயிர்ப் ப‌ச்ச‌டியுட‌ன் சாப்பிட‌ மிக‌ அருமையாக‌ இருக்கும்.