பீட்ரூட் புலாவ் (1)
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - 2 கப்
பீட்ரூட் - ஒன்று
கேரட், பீன்ஸ், பட்டாணி - ஒரு கப்
பெரிய வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
தனியாத் தூள் - 2 தேக்கரண்டி
தேங்காய்ப் பால் - ஒரு கப்
பிரியாணி இலை - ஒன்று
பட்டை, ஏலக்காய் - 2 (அ) விருப்பத்திற்கேற்ப
அன்னாசிப்பூ - ஒன்று
கிராம்பு - 4
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
புதினா, கொத்தமல்லித் தழை - கால் கட்டு
செய்முறை:
அரிசியை நன்றாகக் களைந்து அந்தத் தண்ணீரை ஊற்றிவிட்டு
பிறகு அதில் புதிய தண்ணீரை ஊற்றி 15 - 20 நிமிடங்கள் ஊறவிடவும். பீட்ரூட்டின் தோலைச் சீவிவிட்டு சிறு சதுரத் துண்டுகளாக நறுக்கி வைக்கவும். கேரட் மற்றும் பீன்ஸைப் பொடியாக நறுக்கி வைக்கவும். வெங்காயத்தை மெல்லிய துண்டுகளாக நறுக்கவும். பச்சை மிளகாயை நீளவாட்டில் கீறி வைத்துக் கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மசாலாப் பொருட்களை ஒவ்வொன்றாகச் சேர்க்கவும். பிறகு அதில் வெங்காயம்
பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். வெங்காயம் சிறிது நிறம் மாறி வரும் போது, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் வதக்கவும்.
பிறகு நறுக்கி வைத்த காய்கறிகள், பட்டாணி சேர்த்து புதினா மற்றும் கொத்தமல்லித் தழையைச் சேர்த்து வதக்கவும்.
காய் கலவை சற்று நேரம் வதங்கியதும் மிளகாய்த் தூள், தனியாத் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
பிறகு ஒரு கப் தேங்காய்ப் பால் மற்றும் 3 கப் தண்ணீரை அளந்து ஊற்றவும். (அரிசி: தண்ணீர் அளவு 1:2 என்ற விகிதத்தில் இருக்கவேண்டும்).
கொதி வந்ததும் அரிசியை நீர் இல்லாமல் வடித்துச் சேர்த்து மீண்டும் கொதிவரவிடவும்.
அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து நன்கு கொதித்து வரும் போது குக்கரை மூடி லேசாக ஆவி வரும் போது வெயிட் போட்டு 2 இரண்டு விசில் வரும் வரை வேகவிட்டு இறக்கவும். ஆவி அடங்கியதும் குக்கரைத் திறந்து சாதம் உடையாமல் மிருதுவாக கலந்துவிடவும்.
குறிப்புகள்:
வெங்காய தயிர்ப் பச்சடியுடன் சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும்.