பிஸிபேளாபாத் (3)
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - இரண்டரைக் கோப்பை
துவரம்பருப்பு - ஒரு கோப்பை
முருங்கைக்காய் - இரண்டு
கேரட் - ஒன்று
பீன்ஸ் - ஒரு கைப்பிடி
பச்சை வேர்க்கடலை - ஒரு கோப்பை
பச்சை மக்காச்சோளம் - அரைக்கோப்பை
வெங்காயம் - இரண்டு
தக்காளி - இரண்டு
புளி - எலுமிச்சையளவு
தேங்காய்ப்பூ - அரைக்கோப்பை
மிளகு சீரகம் - தலா அரைதேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரைதேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
சாம்பார் பொடி - மூன்று தேக்கரண்டி
காய்ந்தமிளகாய் - இரண்டு
பட்டை - இரண்டு துண்டு
கிராம்பு - இரண்டு
மராட்டிமொக்கு - ஒன்று
உப்புத்தூள் - மூன்று தேக்கரண்டி
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
கொத்தமல்லி - ஒரு பிடி
எண்ணெய் - கால் கோப்பை
நெய் - கால் கோப்பை
செய்முறை:
அரிசியையும், பருப்பையும் நன்கு கழுவி அரைமணி நேரம் ஊறவைக்கவும். பிறகு அவற்றை குக்கரில் போட்டு மஞ்சள்தூள், பெருங்காயத்தூளை சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். குழைய வேக வைக்க வேண்டாம்.
புளியை ஊறவைத்து கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.
மிளகு சீரகத்தை சட்டியில் போட்டு பொரியவிட்டு அதனுடன் தேங்காய்ப்பூவையும் போட்டு வதக்கி மையாக அரைத்துக் கொள்ளவும்.
வெங்காயம் தக்காளியை நறுக்கி கொள்ளவும்.
காய்களை வேண்டிய அளவிற்கு நறுக்கி கொண்டு அதனுடன் வேர்கடலை, மக்காச்சோளத்தையும் சேர்த்து அரைவேக்காடாக வேகவைத்து வடித்து வைக்கவும்.
வாயகன்ற பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி காயவைத்து காய்ந்தமிளகாய் மற்றும் வாசனைப் பொருட்களைப் போட்டு வறுத்து, வெங்காயத்தைப் போட்டு நன்கு வறுக்கவும்.
பிறகு புளிக்கரைசலை ஊற்றி அதனுடன் தக்காளி, வேகவைத்த காய்கள், சாம்பார் பொடி, மற்றும் தேங்காய் விழுது ஆகியவற்றை சேர்த்து உப்பை போட்டு காய்கள் வெந்த நீரை சிறிது ஊற்றி நன்கு கிளறி வேகவிடவும்.
ஐந்து நிமிடம் கழித்து இதனுடன் வெந்த சோற்றையும் சூடாக்கிய நெய்யையும் ஊற்றி நன்கு கிளறி விட்டு கொத்தமல்லியைத் தூவி சூடாக பரிமாறவும்.