பிஸிபேளாபாத் (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - இரண்டு கப்

பயத்தம்பருப்பு - ஒரு கப்

வெங்காயம் - ஒன்று (பெரியது)

தக்காளி - ஒன்று (பெரியது)

பச்சை மிளகாய் - ஒன்று

கேரட் - இரண்டு

கத்தரிக்காய் - நான்கு

பீன்ஸ் - ஐந்து

நூல்கோல் - ஒன்று

முருங்கைக்காய் - ஒன்று

குடைமிளகாய் - ஒன்று

புளி - நெல்லிக்காயளவு (அ) ஒரு மேஜைக்கரண்டி பேஸ்ட்

மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி

உப்பு - இரண்டு தேக்கரண்டி

---------------------------------

வறுத்து அரைக்க:

---------------------------------

வரமிளகாய் - நான்கு

தனியா - ஒன்றரை மேசைக்கரண்டி

சீரகம் - ஒரு தேக்கரண்டி

கடலைப்பருப்பு - ஒரு மேசைக்கரண்டி

உளுத்தம்பருப்பு - ஒரு மேசைக்கரண்டி

மிளகு - ஒரு தேக்கரண்டி

வெந்தியம் - ஒரு தேக்கரண்டி

பட்டை - 1 (அ) கால் தேக்கரண்டி பொடி

கிராம்பு - நான்கு (அ) கால் தேக்கரண்டி பொடி

ஏலக்காய் - ஒன்று (அ) கால் தேக்கரண்டி பொடி

மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி

கசகசா - ஒரு தேக்கரண்டி (விருப்பப்பட்டால்)

தேங்காய் துருவல் - இரண்டு தேக்கரண்டி(விருப்பப்பட்டால்)

--------------------

தாளிக்க:

----------------------

கடுகு - ஒரு தேக்கரண்டி

எண்ணெய் (அ) நெய் - இரண்டு மேசைக்கரண்டி

கறிவேப்பிலை - ஒரு கொத்து

முந்திரி - பத்து (விருப்பப்பட்டால்)

செய்முறை:

அரிசி கழுவி ஐந்து கப் தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளவும்.

பயத்தம்பருப்பை நான்கு கப் தண்ணீர், மஞ்சள்தூள் மற்றும் பச்சைமிளகாய் சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்.

காய்களை கழுவி பின் அரிந்து அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து பாதியாக வேகவைத்துக் கொள்ளவும். புளியை கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்

அரைக்க கொடுத்துள்ள அனைத்தையும் தனி தனியாக வறுத்து ஒன்றாக மிக்ஸியில் போட்டு பொடியாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் அரை தேக்கரண்டி எண்ணெய் விட்டு முந்திரியை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு அடிகனமான பாத்திரத்தில் (அ) குக்கரில், எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை போட்டு, பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் வதங்கியவுடன், தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கியவுடன் காய்கள் மற்றும் அரைத்த பொடியை சேர்த்து வதக்கிவிட்டு, வேக வைத்த பருப்பு மற்றும் புளி சேர்த்து கிளறவும்.

பிறகு வேகவைத்த அரிசி, இரண்டு கப் தண்ணீர், உப்பு சேர்த்து கிளறி விட்டு குறைந்த தீயில் மூடிபோட்டு பதினைந்து நிமிடம் சமைக்கவும்.

அடிக்கடி கிளறி விடவும். கெட்டியாக ஆகாமல் பார்த்துக்கொள்ளவும். கெட்டியாக ஆனால் இன்னும் சிறிது தண்ணீர் ஊற்றி அடிபிடிக்காமல் அடிக்கடி கிளறி விடவும்.

காய்கள் நன்றாக வெந்தப்பின், முந்திரியை சேர்த்து நன்கு கிளறி விட்டு, அடுப்பை அணைத்து விடவும்.

குறிப்புகள்:

சாதம் குழைந்து இருக்க வேண்டும். சிறிது நீர் நீராகவே இருக்க வேண்டும். கெட்டியாக வரும் வரை இருக்கக் கூடாது. பருப்பு மேலே படர்ந்து கொதிக்கும், அப்போதே அடுப்பை அணைத்து விடவும்.