தக்காளி சாதம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தக்காளி - அரை கிலோ

பொன்னி அரிசி - 3 கப்

பெரிய வெங்காயம் - கால் கிலோ

பச்சை மிளகாய் - 10

புதினா - 2 கொத்து

கொத்தமல்லித் தழை - 2 கொத்து

இஞ்சி பூண்டு விழுது - 3 மேசைக்கரண்டி

தேங்காய் கசகசா விழுது - 4 மேசைக்கரண்டி

மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

மிளகாய் தூள் - ஒன்றரை மேசைக்கரண்டி

தண்ணீர் - 6 கப்

உப்பு - ஒன்றரை மேசைக்கரண்டி

எண்ணெய் - கால் கப்

டால்டா - அரை கப்

பட்டை - 2 துண்டு

கிராம்பு - 3

பிரிஞ்சி இலை - ஒன்று

ஏலக்காய் - 3

முந்திரி - 8

செய்முறை:

பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கவும். பச்சை மிளகாயை கீறி வைக்கவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

புதினா.கொத்தமல்லித் தழையை ஆய்ந்து சுத்தம் செய்து வைக்கவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.

குக்கரில் டால்டா மற்றும் கால் கப் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, ஏலக்காய், முந்திரி போட்டு தாளித்து இஞ்சி பூண்டு விழுது மற்றும் வெங்காயம் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் தக்காளி, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

பிறகு மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கி புதினா மற்றும் கொத்தமல்லித் தழை தூவி கிளறிவிடவும்.

மிளகாய் தூள் வாசனை போனதும் தேங்காய் கசகசா விழுது உப்பு சேர்த்து கிளறவும்.

பிறகு 6 கப் தண்ணீர் ஊற்றி கிளறிவிட்டு ஒரு தட்டை வைத்து மூடி நுரைத்து ஒரு கொதி வரும் வரை வைக்கவும்.

கொதி வந்ததும் மூடியைத் திறந்து அரிசியைக் களைந்து தண்ணீரை வடித்து விட்டு சேர்த்து மூடி வைக்கவும்.

முக்கால் பதம் வேகும் வரை அடிக்கடி கிளறிக் கொண்டே இருக்கவும். அரிசி முக்கால் பதம் வெந்ததும் ஒரு முறை நன்கு அடிப்பிடிக்காமல் கிளறிவிடவும்.

கிளறிய பிறகு குக்கரின் மூடியை வைத்து மூடி வெய்ட் போடவும். மிதமான தீயில் 15 நிமிடங்கள் வேகவிட்டு இறக்கிவிடவும். 5 நிமிடங்கள் கழித்து திறந்து கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.

சுவையும் மணமும் நிறைந்த தக்காளி சாதம் தயார்.

குறிப்புகள்:

இதனுடன் ஆனியன் ரைத்தா மற்றும் காய்கறி குருமா சேர்த்து சாப்பிடலாம்.