சைவ நோன்பு கஞ்சி
தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு - 2 மேசைக்கரண்டி
வெள்ளை கொண்டைக்கடலை - 3 மேசைக்கரண்டி
சம்பா கோதுமை - 3 மேசைக்கரண்டி
பெரிய ஜவ்வரிசி - 2 மேசைக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
பச்சரிசி - அரை கப்
சின்ன கேரட் - 2
இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 4
தக்காளி - ஒன்று
பட்டை - 2 துண்டு
கிராம்பு - 3
ஏலக்காய் - 2
தேங்காய் துருவல் - ஒரு கப்
தூள் உப்பு - ஒரு மேசைக்கரண்டி
கொத்தமல்லித் தழை - 2 கொத்து
புதினா - 2 கொத்து
செய்முறை:
பெரிய வெங்காயத்தை தோல் உரித்து விட்டு நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியையும் நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். காரட்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கொத்தமல்லித் தழை மற்றும் புதினாவை ஆய்ந்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறிக் கொள்ளவும்.
வெள்ளை கொண்டைக்கடலை, சம்பா கோதுமை, பெரிய ஜவ்வரிசி,கடலைப்பருப்பு,வெந்தயம் ஆகியவற்றை முதல் நாள் இரவே ஊறவைக்கவும். ஜவ்வரிசி மற்றும் கொண்டைக்கடலையை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காய் போட்டு தாளிக்கவும். பிறகு அதில் நறுக்கின வெங்காயத்தை போட்டு 3 நிமிடம் வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் அதில் நறுக்கின பச்சை மிளகாய், தக்காளி, கொத்தமல்லி, புதினா போட்டு 2 நிமிடம் வதக்கவும். வதங்கியதும் அதில் இஞ்சி, பூண்டு விழுதை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அரிசியில் தண்ணீர் ஊற்றி களைந்து எடுத்துக் கொள்ளவும். அதன் பின்னர் பச்சை வாசனை போனதும் 3 கப் தண்ணீர் ஊற்றி களைந்து வைத்திருக்கும் அரிசியை போட்டு உப்பு சேர்த்து ஒரு முறை கிளறி மூடி வைக்கவும்.
ஒரு கொதி வந்தவுடன் நறுக்கின காரட், கடலைப்பருப்பு, வெந்தயம், கொண்டைக்கடலை மற்றும் சம்பா கோதுமை ஆகியவற்றை போட்டு கிளறி மூடி வைக்கவும். இடையிடையே திறந்து கிளறி விடவும்.
துருவிய தேங்காயை மிக்ஸியில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி அரைத்து வடிகட்டி திக்கான பால் பிழிந்து எடுத்துக் கொள்ளவும். பிறகு தேங்காய் சக்கையில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி பிழிந்து பால் எடுத்துக் கொள்ளவும். மீண்டும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி பிழிந்து 2 கப் தண்ணீர் பால் எடுத்துக் கொள்ளவும்.
5 நிமிடம் கழித்து மூடியை திறந்து எடுத்து வைத்திருக்கும் 2 கப் தண்ணீர் தேங்காயை பாலை ஊற்றி தீயை அதிகமாக வைத்து மூடி போட்டு கொதிக்க விடவும். இடையிடையே மூடியை திறந்து அடிப்பிடிக்காமல் கிளறி விடவும்.
கொதித்ததும் தீயை குறைத்து வைத்து 20 நிமிடம் வேக விடவும். வெந்ததும் சேமியாவை உடைத்து போட்டு அதனுடன் வேக வைத்த ஜவ்வரிசி மற்றும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கிளறி 12 நிமிடம் வேக விடவும்.
12 நிமிடம் கழித்து ஒரு கப் திக்கான தேங்காய் பாலை ஊற்றி ஒரு நிமிடம் கிளறி இறக்கி விடவும்.
புனித ரமலான் மாதத்தில் செய்யப்படும் சுவையான சைவ நோன்பு கஞ்சி தயார்.