சர்க்கரைப் பொங்கல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சை அரிசி (புது அரிசி) - ஒரு கிலோ

உருண்டை வெல்லம் - முக்கால் கிலோ

பால் - அரை லிட்டர்

நெய் - 50 கிராம்

முந்திரி - 12

ஏலக்காய் - 3

தண்ணீர் - ஒன்றரை லிட்டர்

செய்முறை:

வெல்லத்தை காரட் துருவில் வைத்து நைசாக துருவிக் கொள்ளவும். ஏலக்காயை பொடி செய்துக் கொள்ளவும்.

ஒரு வெண்கலப் பானையில் பாலை ஊற்றி கொதிக்க விடவும். வெண்கலப் பானையில் செய்தால் அடிபிடிக்காமல் இருக்கும்.

பானையை சிறிது நேரம் மூடி வைத்து பாலைக் கொதிக்கவிடவும். பிறகு மூடியை எடுத்து விடவும். பால் நன்கு கொதித்து பொங்க ஆரம்பித்ததும் சிறிது நேரம் கிளறிவிடவும்.

பச்சை அரிசியை தண்ணீர் ஊற்றி களைந்து முதலில் களைந்த தண்ணீரை கீழே ஊற்றி விடவும். பிறகு இரண்டாவது முறை அரிசியில் தண்ணீர் ஊற்றி களைந்து அந்த தண்ணீரை கொதிக்கும் பாலில் ஊற்றவும். எந்த அளவு பானையாக இருந்தாலும் முக்கால் அளவு தண்ணீர் ஊற்றவும் (பால்+தண்ணீர்). தண்ணீர் ஊற்றி கொதித்து பொங்கியதும் களைந்த அரிசியை போட்டு ஒரு முறை கிளறி விடவும்.

அரிசியை போட்டவுடன் தீயை குறைத்து மிதமான தீயில் வைத்து செய்யவும். சுமார் 20 நிமிடம் கழித்து அரிசி நன்கு குழைய வெந்ததும் துருவிய வெல்லத்தை போட்டு அதனுடன் ஏலக்காயை சேர்த்து கிளறி விடவும். அரிசி வேகும் வரை இடையில் கிளறி கொண்டே இருக்கவும்.

நான்கு நிமிடம் நன்கு கிளறி வெல்லம் ஒன்றாக கலந்ததும் இறக்கி வைத்து விடவும்.

பிறகு வாணலியில் நெய்யை ஊற்றி முந்திரி போட்டு வறுக்கவும். விரும்பினால் திராட்சையும் சேர்த்து வறுத்துக் கொள்ளலாம்.

இறக்கி வைத்துள்ள சர்க்கரைப் பொங்கல் பானையில் முந்திரி, திராட்சையை நெய்யுடன் கொட்டி கிளறிவிடவும்.

குறிப்புகள்:

கவனத்திற்கு: வெல்லம் போட்டு அதிக நேரம் அடுப்பில் வைக்காமல் கிளறியதும் இறக்கி விடவும். ஆறியதும் கெட்டியாகி விடும். துருவிய தேங்காய் சேர்த்தும் பொங்கல் தயாரிப்பார்கள்.