கேரட் ரைஸ் (1)
தேவையான பொருட்கள்:
கேரட் - கால் கிலோ
சாதம் - 4 கப்
முந்திரி - 10
கிராம்பு - 3
பட்டை - 2
பச்சை மிளகாய் - 3
ஏலக்காய் - 2
கசகசா - ஒரு மேசைக்கரண்டி
தேங்காய் துருவல் - கால் கப்
நறுக்கிய கொத்தமல்லி - கால் கப்
உப்பு - 1 1/2 தேக்கரண்டி
நெய் - ஒரு தேக்கரண்டி + 2 மேசைக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
செய்முறை:
காரட்டை தோல் சீவி விட்டு துருவி வைத்துக் கொள்ளவும். முந்திரியை இரண்டாக உடைத்துக் கொள்ளவும். கொத்தமல்லியை சுத்தம் செய்து ஆய்ந்து கழுவி வைத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் தேங்காய் துருவல், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பச்சை மிளகாய், கசகசா போட்டு கால் கப் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி காய்ந்ததும் இரண்டாக உடைத்து வைத்திருக்கும் முந்திரியை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் 2 மேசைக்கரண்டி நெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து அதில் அரைத்த தேங்காய் விழுதை போட்டு 2 நிமிடம் கிளறிக் கொண்டே இருக்கவும்.
விழுதை போட்டு 2 நிமிடம் கிளறிய பிறகு அதில் துருவி வைத்திருக்கும் காரட்டை போட்டு ஒரு நிமிடம் நன்கு கிளறி விடவும்.
அதன் பிறகு அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மிதமான தீயில் வைத்து 4 நிமிடம் நன்கு சுருள கிளறி இறக்கி விடவும்.
ஒரு தட்டில் வடித்த சாதத்தை போட்டு பொலபொலவென்று உதிர்த்து விடவும். அதில் செய்து வைத்திருக்கும் காரட் மசாலாவை போடவும்.
பின்னர் மசாலா சாதத்துடன் நன்கு ஒன்றாகும் படி கிளறி விடவும். அதிக நேரம் கிளறி விட்டுக் கொண்டே இருந்தால் சாதம் குழைந்து விடும். அதன் மேலே வறுத்து எடுத்து வைத்திருக்கும் முந்திரி, கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.
குறிப்புகள்:
வெங்காய ரைத்தாவுடன் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.