ஃப்ரைடு ரைஸ் (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அரிசி - 2 கப்

பெரிய வெங்காயம் - ஒன்று

முளைகட்டிய பாசிப்பயறு - ஒரு கப்

காரட், பச்சைபட்டாணி கலவை - அரை கப்

குடைமிளகாய் - ஒன்று

வெங்காயத்தாள் - சிறிதளவு

பச்சைமிளகாய் - 2 (காரத்திற்கு ஏற்ப உபயோகிக்கவும்)

பூண்டு - 2 பல்

புதினா, கொத்தமல்லி தழை - சிறிதளவு

சீரகம் - சிறிதளவு

மிளகு பொடி - சிறிதளவு

நெய் மற்றும் எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் பாஸ்மதி அரிசியை தண்ணீர் விட்டு அரை மணி நேரம் ஊற வைக்கவும். புதினா கொத்தமல்லி இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

வெங்காயம், குடைமிளகாய் இரண்டையும் நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.

வெங்காயத்தாளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

பச்சைமிளகாயை இரண்டாக கீறிக் கொள்ளவும்.

பூண்டையும் நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.

குக்கரில் சிறிது நெய் விட்டு சீரகம் தாளிக்கவும்.

அதில் நறுக்கி வைத்துள்ள புதினா கொத்தமல்லியை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

பின்பு ஊற வைத்த அரிசியை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி தண்ணீர் சேர்க்கவும்.

அரிசியும் தண்ணீரும் சேர்ந்து கொதிக்க விடவும். தண்ணீர் நன்கு கொதித்து அரிசி தண்ணீர் சமஅளவாக ஆகும் வரை கொதிக்க விடவும். பிறகு குக்கரை மூடி அடுப்பை குறைத்து 5 நிமிடம் கழித்து

அடுப்பை அணைத்து விடவும். இப்படி செய்யும்பொழுது பாஸ்மதி அரிசி நன்கு வெந்து உதிரி உதிரியாக வரும்.

பின்பு வேறொரு வாணலியில் எண்ணெய் நெய் சேர்த்து நறுக்கி வைத்த வெங்காயம், குடைமிளகாய், பச்சைமிளகாய், காரட், பச்சைப்பட்டாணி கலவை மற்றும் முளைகட்டிய பாசிப்பயறு சேர்த்து தணலைக் குறைத்து வைத்துக் கொண்டு வதக்கவும்..

பாசிப்பயறு சற்று வெந்ததும் வேக வைத்துள்ள சாதத்தை இந்த காய்கறி கலவையோடு சேர்த்து சிறிது நேரம் கிளறி விடவும். தேவையான உப்பு சேர்த்துக் கொள்ளவும். நறுக்கி வைத்த வெங்காயத்தாள், மிளகு பொடி மற்றும் கொத்தமல்லித்தழை சேர்த்து மேலும் ஒரு நிமிடம் கிளறி அடுப்பை அணைத்து விடவும்.

குறிப்புகள்:

சூடான ஃப்ரைடு ரைஸுக்கு சாஸ் அல்லது ரைத்தா அல்லது தேங்காய்பால் குருமா வைத்துப் பரிமாறலாம்.