ஸ்டெப் பை ஸ்டெப் ரசம்
தேவையான பொருட்கள்:
குழம்புப் பொடி (மிளகு, சீரகம், துவரம்பருப்பு சேர்த்துத் திரித்தது) - 1 1/2 தேக்கரண்டி
மல்லிப் பொடி - 1 தேக்கரண்டி
மஞ்சள் பொடி - 1 சிட்டிகை
பெருங்காயப் பொடி - 1 சிட்டிகை
பூண்டு - 3 பல்
துவரம்பருப்பு - 6 தேக்கரண்டி
தக்காளி - 4 அல்லது 5
எலுமிச்சம்பழம் - 1 (பெரிது)
நெய், சீரகம் - தாளிக்க தலா ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 இணுக்கு
கொத்தமல்லி இலை - 2 தேக்கரண்டி
வெல்லம் அல்லது சீனி - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
துவரம்பருப்பில் மஞ்சள் பொடி, பெருங்காயப் பொடி, பூண்டு எல்லாம் சேர்த்து குக்கரில் நன்கு குழைய வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
தக்காளியை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
குழம்புப் பொடியை 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, பச்சை வாசனை போகக் கொதிக்க விடவும்.
பின் வெந்த துவரம்பருப்பை கரைத்து அதில் ஊற்றவும். மல்லிப் பொடியை அதில் போடவும்.
நுரை கட்டி சேர்ந்து வரும் போது, அரைத்து வைத்துள்ள தக்காளிக் கரைசலை அதில் ஊற்றவும். மிளகுப் பொடி சேர்க்கவும்.
மீண்டும் நுரை கட்டி வரும் போது, கறிவேப்பிலையை கழுவி, கையினால் கிள்ளி, அதில் போடவும்.
சுத்தம் செய்து வைத்துள்ள பச்சைக் கொத்தமல்லியை, (பால் கவர் வெட்டும் சின்ன)கத்தரிக்கோலால் பொடியாகக்கட் செய்து, அதில் தூவவும்.உப்பு சேர்க்கவும்.
அடுப்பை அணைத்து விட்டு, நெய்யில் சீரகம் தாளித்து, ரசத்தில் சேர்க்கவும்.
வெல்லம் அல்லது சீனியை சேர்த்துக் கிண்டவும்.
எலுமிச்சம்பழச் சாறு சேர்க்கவும். கரண்டியினால் கிண்டி விட்டு, ஒரு கை குளிர்ந்த நீர் தெளித்து, 2-3 நிமிடம் மூடி வைக்கவும்.
பிறகு திறந்து பார்த்தால் நன்கு தெளிந்து இருக்கும்.
குறிப்புகள்:
பருகுவதற்கும், சாதத்தில் ஊற்றி சாப்பிடுவதற்கும் சுவையான ரசம் தயார்.