பருப்பு ரசம் வித் கடைசல்
தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு - 1 கப்
தக்காளி - 2
புளி - சிறிய எலுமிச்சை அளவு
தேங்காய் துருவல் - 4 தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 3
பூண்டு - 7 பல்
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 3 தேக்கரண்டி
நெய் - 2 தேக்கரண்டி
கரிவிடம் (அல்லது) கடுகு - 1 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
கொத்தமல்லித்தழை - சிறிது
பெருங்காயத் தூள் - 1 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பாசிப்பருப்பை நன்கு கழுவி விட்டு, ஒரு பாத்திரத்தில் ஐந்து டம்ளர் தண்ணீர் ஊற்றி பருப்பையும் அதனுடன் உரித்த பூண்டில் மூன்று பல்லும், மஞ்சள் தூளும் சேர்த்து அடுப்பில் வைத்து வேக விடவும்.
புளியை ஊறவைத்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.
முக்கால் பாகமாக பருப்பு வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி தண்ணீரை நன்கு வடிக்கட்டி கொள்ளவும்.
அந்த தண்ணீரில் புளிக்கரைசலை ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.
மிளகு, சீரகம், காய்ந்தமிளகாய், பூண்டு பல், தேங்காய் துருவலில் அரை ஸ்பூன் சேர்த்து மிக்ஸியில் நன்கு பொடித்து கரைசலில் சேர்க்கவும்.
தக்காளியை கழுவி அதே மிக்ஸியில் நன்கு அடித்து அதையும் இதில் சேர்க்கவும்.
வாயில் வைத்து பார்த்து தண்ணீர் தேவைக்கேற்ப ஊற்றி கொள்ளவும். கொத்தமல்லி தழையையும் பொடியாக நறுக்கி சேர்க்கவும்.
இதை அடுப்பில் வைத்து கொதிக்க ஆரம்பித்து மூன்று நிமிடம் கழித்து இறக்கவும்.
பின்பு மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் ஒரு ஸ்பூன் போட்டு தாளித்து கொதித்த ரசத்தை ஊற்றி அடுப்பை அணைத்து விடவும்.
பருப்பு கடைசலுக்கு:
வடித்த பருப்புடன் மீதி தேங்காய்த் துருவல், தேவையான அளவு உப்பு போட்டு நன்கு குழி கரண்டியால் பூண்டெல்லாம் நசுங்க மசிக்கவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடு வந்ததும், கடுகு, கறிவேப்பிலை பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து மசித்த பருப்பை சேர்க்கவும்.
தாளித்தவை பருப்பு கலவையுடன் ஒன்று சேர கிளறி விட்டு அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
சூடான சாதத்துடன் நெய் ஊற்றி பருப்பு கடைசலை போட்டு ரசமும் ஊற்றி பிசைந்து பொறித்த உருளைக்கிழங்கு, அப்பளத்துடன் சாப்பிடவும்.