பப்புச்சாறு
தேவையான பொருட்கள்:
விதை நீக்கிய புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
துவரம்பருப்பு - 25 கிராம்
தக்காளி - 4
தனியா தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
தாளிக்க:
கடுகு - 1/4 தேக்கரண்டி
சீரகம் - 1/4 தேக்கரண்டி
உளுந்து பருப்பு - 1/4 தேக்கரண்டி
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
தட்டிய பூண்டு - 10 பல்
வெங்காயம் - 2
வர மிளகாய் - 5
செய்முறை:
புளியை அரை மணி நேரத்துக்கு முன்பே ஊற வைக்கவும். அதில் தக்காளியையும் சேர்த்து நன்கு கரைக்கவும் (புளியுடனேயே).
குக்கரில் அலசிய பருப்பு சேர்த்து தண்ணீருக்கு பதிலாக தக்காளி, புளி கரைசலை சேர்த்து வேக விடவும் (பருப்பு பாதி வெந்தால் போதுமானது)
தனியாக ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து தாளிக்கவும்.
தாளித்தவற்றுடன் வெங்காயம், வரமிளகாய் போட்டு நன்கு வதக்கவும்.
அத்துடன் தூள் வகைகளும், உப்பும் சேர்த்து கிளறவும்.
எண்ணெய் பிரிந்து தனியே வந்ததும் பருப்பு நீரை சேர்த்து 10 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு பரிமாறவும்.
குறிப்புகள்:
பொதுவாக ஆந்திரா சமையல்களில் புளியை (நம்மை போல் புளி கரைத்து அதன் நீரை மட்டும் எடுப்பது போல் அல்லாமல்) அப்படியே உபயோகிப்பார்கள். அவ்வாறு சேர்ப்பது தான் இந்த ரசத்துக்கு அருமையாக இருக்கும். அதனால் புளியை ஊற வைக்கும் முன்பே விதை மற்றும் மேலுள்ள ஓடுகளை நீக்கி உபயோகிக்கவும்.
தக்காளி கையால் கரைக்கும் போது முடிந்த வரை தக்காளி தோல்களை எடுத்து விடலாம். சேர்த்தாலும் ஒன்றுமில்லை.