தேங்காய் பால் ரசம் (3)
தேவையான பொருட்கள்:
தேங்காய் பால் - 1/2 கப்
பெரிய வெங்காயம் - பாதி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
பச்சை மிளகாய் - 1
எலுமிச்சை சாறு - 1/2 மேசைக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
பட்டை - பாதி
கிராம்பு - 3
கடுகு - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பெரிய வெங்காயத்தை தோல் உரித்து நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கறிவேப்பிலையை தண்ணீரில் அலசிக் கொள்ளவும்.
தேங்காய் பால், எலுமிச்சை சாறு, இஞ்சி பூண்டு விழுது மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, கடுகு போட்டு தாளித்து வெடிக்க விடவும்.
பட்டை வெடித்து பொரிந்ததும் நறுக்கின வெங்காயம் போட்டு 2 நிமிடம் வதக்கவும். பிறகு கறிவேப்பிலை சேர்க்கவும்.
2 நிமிடம் கழித்து வெங்காயம் வதங்கியதும் அதில் மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, நறுக்கின பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அதனுடன் தேங்காய் பால் ஊற்றி லேசாக கிளறி விட்டு பிறகு கால் கப் தண்ணீர் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விடவும்.
அதன் பின்னர் தேங்காய் பால் சற்று லேசாக பொங்கி வந்ததும் கரம் மசாலா தூள் சேர்க்கவும்.
பிறகு ரசம் ஒரு முறை நன்கு நுரைத்து பொங்கியதும் உப்பு போட்டு இறக்கி வைத்து விடவும். நீண்ட நேரம் கொதிக்க விட கூடாது. கொதித்து விட்டால் தேங்காய் பால் திரிந்து, நன்றாக இருக்காது.
அதன் பின்னர் தேங்காய் பால் ரசத்தை ஆற விடவும். ஆறியதும் இறுதியில் அதில் எலுமிச்சை சாறு ஊற்றி கரண்டியால் கிளறி விட்டு பரிமாறவும்.
குறிப்புகள்:
இதை சாதத்துடன் போட்டு சாப்பிடலாம்.
அப்படியே சூப் போல் அருந்துவதற்கும் மிகவும் நன்றாக இருக்கும்.
வாய் மற்றும் வயிற்று புண்ணுக்கு மிகவும் நல்லது.