ஸ்லாப் கேக்
தேவையான பொருட்கள்:
மைதா மாவு - 150 கிராம்
சர்க்கரை - 150 கிராம்
வெண்ணெய் - 120 கிராம்
பேக்கிங் பவுடர் - அரை தேக்கரண்டி
முட்டை - 3
வெனிலா எசன்ஸ் - சில துளிகள்
பால் - தேவையான அளவு
லெமன் எசன்ஸ் - சில துளிகள்
ஐசிங் செய்ய தேவையானவை:
வெண்ணெய் - 150 கிராம்
ஐசிங் சர்க்கரை - 350 கிராம்
தேவையான கலர்
பூவேலை செய்ய அச்சுகள்
செய்முறை:
வெண்ணெயையும் சர்க்கரையையும் நன்றாகக் குழைக்கவும்.
முட்டைகளை நன்றாக அடிக்கவும். அடித்த முட்டையை சிறிது சிறிதாக வெண்ணெய் கலந்து சர்க்கரை கலவையில் ஊற்றி தொடர்ந்தாற்போல் அடிக்கவும்.
பிறகு எசன்ஸ், கலர் சேர்க்கவும். பேக்கிங் பவுடரையும், மைதா மாவையும் இரு முறை சலித்த பிறகு அதையும் சேர்க்கவும்.
பிறகு இந்த கலவையில் சிறிது பால் சேர்த்து தளர்த்தியாக கலக்கவும். நிரம்ப தளர்த்தியாக இருக்கக் கூடாது.
8 அங்குல அகலம் 10 அங்குல நீளம் உள்ள தட்டில் போட்டு 400 டிகிரி F சூட்டில் சுமார் 30 இருந்து 35 நிமிடம் வரை பேக் செய்யவும். பேக் ஆனவுடன் தட்டிலிருந்து எடுத்து ஆறவிடவும்.
கேக் நன்றாக ஆறியவுடன் 3 மேசைக்கரண்டி வெண்ணெய் ஐசிங் கலவையை கேக்கின் மேல் பக்கம் சமமாகத் தடவிக்கொள்ளவும்.
பிறகு நீளவாட்டில் 3 பாகங்களாக வெட்டிக் கொள்ளவும். வெண்ணெய், ஐசிங் சர்க்கரை இரண்டையும் நன்கு குழைத்துக் கொள்ளவும்.
மூன்று பாகங்களாகவோ, நான்கு பாகங்களாகவோ பிரித்து ஒவ்வொன்றுக்கும் ஒரு கலர் சேர்த்துக் கொள்ளவும்.
பட்டர் பேப்பர் பையில் அச்சைப் போடவும். ஐசிங் கலவையைப் பையில் போடவும்.
மேலே இஷ்டம் போல பூ வேலை செய்து கொள்ளவும்.
ஐசிங் செய்து ஒரு மணிநேரம் ஆனபிறகு ஒவ்வொரு துண்டையும் 8 பாகங்களாக வெட்டிக் கொள்ளவும்.