பட்டர் குக்கீஸ்
தேவையான பொருட்கள்:
வெண்ணெய் - 1/2 கப்
ஆல் பர்ப்பஸ் மாவு/மைதா - 1 கப்
பொடித்த சர்க்கரை - 1/2 கப்
பேக்கிங் பவுடர் - 1/2 தேக்கரண்டி
பேக்கிங் சோடா - 1/4 தேக்கரண்டி
உப்பு - 1 சிட்டிகை
வெண்ணிலா எசன்ஸ் - 1/4 தேக்கரண்டி (விரும்பினால்)
பால் - 1 (அ) 2 தேக்கரண்டி (தேவைப்பட்டால்)
செய்முறை:
முதலில், வெண்ணையையும் பொடித்த சர்க்கரையையும் ஒரு பாத்திரத்தில் போட்டு, பீட்டரால்/ பெரிய ஃபோர்க்கால் நன்கு கலக்கவும். சர்க்கரை நன்கு கரைந்து வெண்ணெய் குழைந்து வந்தால், குக்கீஸ் சாஃப்ட்டாக வரும்.
ஒரு சல்லடையில், ஆல்பர்ப்பஸ் மாவு, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு சலித்து எடுத்துக்கொள்ளவும்.
இதனை அடித்து வைத்திருக்கும் வெண்ணெய் கலவையில் போட்டு நன்றாக சேர்த்து பிசையவும். எசன்ஸ் சேர்ப்பதாக இருந்தால், மாவு பிசையும்போதே சேர்த்துவிடவும். (மாவு ரொம்பவும் சேராமல், அங்கங்கே வறண்ட மாதிரி தெரிந்தால், சிறிது பாலை தெளித்து பிசைந்து கொள்ளலாம்.)
ஒரு பேக்கிங் ட்ரேயில், அலுமினியம் ஃபாயில் விரித்து, தயார் செய்து வைக்கவும்.
பிசைந்து வைத்திருக்கும் மாவை பெரிய நெல்லிக்காய் அளவிற்கு கிள்ளி, உருண்டைகளாக உருட்டி ட்ரேயில் வைக்கவும். பின்னர், ஒரு ஃபோர்க் கொண்டு ஒவ்வொரு உருண்டையையும் லேசாக அழுத்திவிடவும்.
இதனை, 350 டிகிரி முற்சூடு செய்த அவனில் வைத்து, 10 - 12 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.
குறிப்புகள்:
அவரவர் அவனிற்கு ஏற்றமாதிரி பேக்கிங் செய்யும் நேரத்தை அட்ஜஸ்ட் செய்துக் கொள்ளவும்.