தோடம்பழ ஷாஃப்டி கேக்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தோடம்பழம் - 3

வெள்ளை புட்டரிசி - 2 டம்ளர்

சர்க்கரை - 1 டம்ளர்

கெட்டி தேங்காய்ப்பால் - 2 டம்ளர்

முட்டை - 1

ஏலம் - 5

சமையல் சோடா - 1 பின்ச்

மைதாமாவு - 1/2 கப்

வனஸ்பதி(அ)நெய் - தேவைக்கு

செய்முறை:

முதல் நாளிரவே அரிசியை அலம்பி, ஊற வைக்கவும்.

மறுநாள் தேங்காய்ப்பால் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.

தோடம் பழத்தை நீர் சேர்க்காமல் பிழிந்து கெட்டியாக சாறு எடுத்துக்கொள்ளவும்.

தோடம்பழச்சாறில் சர்க்கரை, சோடா, ஏலப்பொடி, அடித்த முட்டை கலந்து, அரைத்த மாவையும், மைதாவையும் சேர்த்து தோசைமாவு பதத்தில் கலந்து கொள்ளவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து டால்டா அல்லது எண்ணெய் விட்டு ஒரு குழிக்கரண்டி அளவு எடுத்து அடை ஊத்தப்பம் போல் ஊற்றவும். வார்க்கக்கூடாது. ஒரு புறம் சிவந்ததும், மறுபுறம் திருப்பிப்போடவும்.

சுவையான, வித்தியாசமான, இனிப்பு அடை இது. நான்கு நாள் வைத்து இருந்தாலும் கெடாது.

குறிப்புகள்:

பல ஆண்டுகளுக்கு முன் மங்கையர்மலர் மாத இதழில் முதல் பரிசு பெற்ற இந்த ரெஸிப்பியை அறுசுவைக்கு சமர்ப்பிக்கின்றேன். ஆசிரியர் மஞ்சுளாரமேஷ் அவர்கள் கொடுத்த ஊக்கமும், பரிசைப்பெறுவதற்காக மங்கையர்மலர் ஆஃபீஸ் சென்று இருந்த பொழுது அங்கிருந்தவர்கள் தோடம்பழம் என்றால் என்ன? பிஸின் அரிசி என்றால் என்ன? என்று ஆர்வத்துடன் கேட்டு நிறைய எழுதுங்க என்று கூறியதை இப்போது நினைவு கூறுகின்றேன்.

புட்டரிசி என்பதை பிசின் அரிசி(gum rice)என்றும் சொல்லுவார்கள். சற்று கடின தன்மைக்கொண்டது. சிவப்பு, வெள்ளை நிறங்களில் கிடைக்கின்றது. இனிப்பு பண்டங்கள் செய்வதற்கு உகந்தது. விலையும் சற்று அதிகம். நன்கு ஊற விட வேண்டும். தோடம் பழம் வேறு ஒன்றுமில்லை நம்ம மொஸாம்பி..அட..சாத்துக்குடியே தான்.