கேக் அலங்காரம்
தேவையான பொருட்கள்:
ரோஜாக்கள்
முட்டை - 1
மெல்லிய ப்ரஷ்
வெள்ளைச் சீனி - கால் கோப்பை
இடுக்கி
கத்தரிக்கோல்
செய்முறை:
சீனியை ப்ராசெசரில் போட்டு நான்கைந்து சுற்று ஓட விட்டுப் பொடித்து எடுக்கவும். அதிலிருந்து ஒரு மேசைக்கரண்டி அளவு எடுத்து ஒரு தட்டில் வைத்துக்கொள்ளவும். (முழுவதற்கும் சேர்த்து கால் கோப்பை சீனி கூடத் தேவைப்படாது. ஆனால் கொஞ்சமாகப் போட்டால் ப்ராசெசரில் பொடிப்பது சிரமமாக இருக்கும்.)
முட்டை அறை வெப்பநிலையில் இருக்க வேண்டும். வெள்ளைக்கருவைத் தனியே பிரித்தெடுத்து நான்கைந்து துளி நீர் சேர்த்து கையால் அடிக்கவும்.
இதழ்களின் மேல் ப்ரஷ் கொண்டு மிக மெல்லிதாக முட்டை வெள்ளைக்கருவைத் தடவி, பொடித்து வைத்துள்ள சீனியைத் தூவவும். பூக்களின் பின் பக்கம் சீனி தூவ வேண்டியது இல்லை.
பூவைத் திருப்பிப் பிடித்து மெதுவே கையில் தட்டினால் மேலதிகமான சீனி கொட்டிவிடும்.
மீதிப் பூக்களையும் மொட்டுக்களையும் இதே போல் தயார் செய்து ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.
இலையின் விளிம்பில் சுற்றிலும் முட்டை வெள்ளைகருவைத் தடவவும். நரம்புகளை மெல்லிய கோடாக வரைந்து கொள்ளவும். உலருமுன் சீனியைத் தூவி மேலதிகமானதைத் தட்டிவிடவும். கையால் அழுத்த வேண்டாம். இலைகளைப் பிடிக்க இடுக்கியைப் பயன்படுத்தவும்.
கேக்கின் மேல் அனைத்தையும் விருப்பம் போல வைத்து அலங்கரித்துக் கொள்ளவும்.
இயற்கை ரோஜாக்களை வைத்து செய்த திடீர் கேக் அலங்காரம் இது
குறிப்புகள்:
பூக்கள் பூச்சிநாசினிகள் எதுவும் தெளிக்கப்படாது இருப்பது மிக முக்கியம். வீட்டுத் தோட்டத்து மலர்களானால் நல்லது. அன்று விரிந்த பூக்களாகத் தெரிந்துகொள்ளவும். இலைகள் அதிகம் முற்றாமலும் பிஞ்சாக இல்லாமலும் இருக்க வேண்டும். இளம் இலைகள் விரைவில் துவண்டுவிடும். முற்றிய இலைகள் பார்க்க அழகாக இராது. எதிலும் பூச்சிகள் இல்லை என்பதை நிச்சயம் செய்துகொள்ளவும்.
பூக்கள் எவ்வளவு நேரம் வாடாமல் இருக்கும் என்பது பூக்களையும் அன்றைய அறை வெப்பநிலையையும் பொறுத்தது. தேவைக்கு அரைமணி முன்னால் பூக்களைத் தயார் செய்யலாம். தயார் செய்ய பத்து நிமிடங்களுக்குள்தான் ஆகும். கேக்கை மட்டும் முன்பாகவே ஐஸ் செய்து தயாராக வைத்துக்கொள்ளவும்.