கிறிஸ்துமஸ் கேக்
தேவையான பொருட்கள்:
மைதா - ஒன்றரை கப் சீனி - ஒரு கப் முட்டை - 3 முந்திரி - 10 திராட்சை - 15 வெண்ணெய் - 75 கிராம் டூட்டி ப்ரூட்டி - 2 மேசைக்கரண்டி ஆரஞ்சு தோல் - 2 மேசைக்கரண்டி கேக் விதை - அரை மேசைக்கரண்டி ஜாதிக்காய் தூள் - அரை தேக்கரண்டி வெனிலா எசன்ஸ் - அரை மேசைக்கரண்டி பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி
செய்முறை:
தேவையானப் பொருட்களை தயாராய் வைத்துக் கொள்ளவும். நல்ல தரமான மைதாவை உபயோகிக்கவும்.
கேக் விதை (cake seed) என்பது சீரகம் போன்று மிகவும் சிறியதாக இருக்கும். தமிழில் கருஞ்சீரகம் என்று அழைக்கப்படுகின்றது. ஆரஞ்சுத் தோல் என்று இங்கே குறிப்பிட்டுள்ளது
தோலைத் துண்டுகளாக நறுக்கி பதப்படுத்தப்பட்டது. கடைகளில் ரெடிமேடாக பாக்கெட்டுகளில் கிடைக்கும்.
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து மிதமான தீயில் சூடாக்கவும். அதில் 2 மேசைக்கரண்டி சீனியை போட்டு ஒரு மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி ப்ரெளன் கலர் வரும் வரை கலக்கவும். சற்று புகை வரும். கவலை வேண்டாம்.
சீனி கரைந்து ப்ரெளன் கலர் ஆனதும் மேலும் அதில் 2 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றவும். ஊற்றியதும் ப்ரெளன் கலர் மாறி டார்க் ப்ரெளன் கலராக மாறியதும் அடுப்பில் இருந்து இறக்கிவிடவும்.
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி முட்டை அடிக்கும் கருவியால் சுமார் 5 நிமிடங்கள்
நன்கு நுரைத்து வரும் வரை அடிக்கவும்.
அதனுடன் சீனியை போட்டு சீனி கரையும் வரை மேலும் 5 நிமிடம் அடிக்கவும். மின்சாரத்தில் இயங்கும் கலக்கியைப் பயன்படுத்தினால் மிதமான வேகத்தில் ஒரே சீராக கலக்கவும்.
சீனி கரைந்ததும் அதனுடன் வெண்ணெய் சேர்த்து மீண்டும் 5 நிமிடம் நன்கு அடிக்கவும்.
பிறகு அதில் மைதா மாவை சிறிது சிறிதாக சேர்த்து கரண்டியை வைத்து வட்டமாக கலக்கவும்.
மாவினை கலக்கும்போது இடமிருந்து வலமோ அல்லது வலமிருந்து இடமோ (clockwise or anticlockwise)
உங்களின் வசதிக்கு ஏற்றார்போல் ஒரே பக்கமாக கலக்கவும். மைதா கட்டியில்லாமல் கரையும் வரை கலக்கவும். மிகுந்த வேகம் கூடாது.
பின்னர் ஒரு டம்ளரில் பேக்கிங் பவுடரை போட்டு அதில் ஒரு மேசைக்கரண்டி சூடான பால் ஊற்றி கலக்கவும். கலக்கும் போது நுரைத்து வரும். அதையும் மாவுடன் சேர்த்து வட்டமாக கலக்கவும்.
மாவின் பதம் ஒரு கரண்டியால் மாவை எடுத்து பார்க்கும் போது கீழே விழ வேண்டும். பிறகு அதில் கரைத்து வைத்துள்ள ப்ரெளன் கலர் சீனி தண்ணீரை (Sugar syrup) ஊற்றி வட்டமாக கலக்கவும்.
கேக் விதையை அம்மியில் வைத்து நுணுக்கிக் கொள்ளவும். அதன் பின் கலக்கிய மாவில் எசன்ஸ்
நுணுக்கிய கேக் விதை
ஜாதிக்காய் தூள்
டூட்டி ப்ரூட்டி மற்றும் ஆரஞ்சு தோல் ஆகியவற்றை போட்டு மீண்டும் வட்டமாக கலக்கவும்.
கேக் விதையின் சுவை பிடிக்காதவர்கள் குறைவாக சேர்த்துக் கொள்ளலாம். அல்லது தவிர்த்துவிடலாம். மாவைக் கலக்கும் போது ஒரே மாதிரி சுற்றிக் கலக்கவும். அப்போதுதான் மாவு பதமாக கிடைக்கும். இயந்திரங்கள் மூலம் வேகமாக சுற்றிக் கலக்கினால்
அதனால் உண்டாகும் சூட்டில் மாவின் தன்மை மாறுபட்டுவிடும். கேக் நன்றாக வராது.
வீடுகளில் கேக் செய்வதற்கென்று சிறிய அளவிலான ஓவன்கள் கிடைக்கின்றது. அதில் மாவு வைப்பதற்கான பாத்திரத்தில்
கலக்கிய மாவை ஊற்றவும். பாத்திரத்தின் மத்தியில் வைப்பதெற்கென ஒரு டம்ளர் (அல்லது குழல்) போன்ற பாத்திரம் ஓவனுடன் வரும்.
குழல் போன்ற அந்த சிறிய பாத்திரத்தை மையத்தில் வைத்து அதனை சுற்றி மாவை ஊற்றவும். அப்போதுதான் வெப்பம் கேக்கின் அனைத்து பாகத்திற்கும் சென்று
முழுமையாக வேக வைக்கும். மாவின் மேல் முந்திரி மற்றும் திராட்சையை தூவி அலங்கரிக்கவும்.
அலங்கரித்ததும் பாத்திரத்தை ஓவனில் வைத்து மூடி விடவும். சுமார் 45 நிமிடங்கள் வேகவிடவும். ஓவனின் மேல்புறம் உள்ள கண்ணாடியின் வழியாகப் பார்த்தால் கேக்கின் நிறம் தெரியும்.
அனைத்து பாகமும் சீராக வெந்திருந்தால் கேக் முழுமையும் ஒரே வண்ணத்தில் இருக்கும். ஓரங்கள் சற்று அதிகமாக சிவந்து இருக்கும். பொன்னிறமாக வெந்தவுடன் ஓவனில் இருந்து கேக்கை எடுத்து
சிறிது நேரம் ஆறவிடவும்.
நன்கு ஆறியவுடன் கேக் மிகவும் மிருதுவாக இருக்கும். சுவையான கிறிஸ்துமஸ் கேக் இப்போது தயார். இந்த கேக்கினை செய்து காட்டிய இல்லத்தரசி திருமதி. ஃப்ளாரென்ஸ் நிர்மலா லூயிஸ் அவர்கள்
கேக் தயாரிப்பதில் நிறைய அனுபவம் வாய்ந்தவர். 20 வருடங்களுக்கும் மேலாக
இவரது இல்லத்து கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தேவையான கேக் மற்றும் பிஸ்கட்டுகளை அவரே கைபட தயாரித்து வருகின்றார்.