ஹைதராபாத் சிக்கன் பிரியாணி (3)
தேவையான பொருட்கள்:
சிக்கன் – 1/2 கிலோ
வெங்காயம் – 3 பெரியது
புதினா, கொத்தமல்லி – 1 கைப்பிடி அளவு (பொடியாக நறுக்கியது)
பாஸ்மதி அரிசி – 2 1/2 கப்
எண்ணெய் + நெய் – 1 மேஜைக்கரண்டி
------------------------------------------------
சிக்கனுடன் ஊறவைக்க தேவையான பொருட்கள் :
------------------------------------------------
இஞ்சி பூண்டு விழுது – 2 மேஜை கரண்டி
பட்டை – 2 துண்டு
கிராம்பு – 2
ஏலக்காய் – 2
சீரகம் – 2 தே.கரண்டி
புதினா – 1 கைப்பிடி அளவு (பொடியாக நறுக்கியது
கொத்தமல்லி – 1 கைப்பிடி அளவு (பொடியாக நறுக்கியது)
பச்சைமிளகாய் – 4 (இரண்டாக வெட்டி வைக்கவும்)
தயிர் – 1 கப்
எண்ணெய் – சிறிதளவு
எலுமிச்சை சாறு – 1 மேஜை கரண்டி
பெரித்த வெங்காயம் – 1/2 கப்
-------------------------------------------------
சிக்கனுடன் சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
-------------------------------------------------
மஞ்சள் தூள் – 3/4 தே.கரண்டி
மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
தனியா தூள் – 1 தே.கரண்டி
சீரக்தூள் – 1 தே.கரண்டி
உப்பு – தேவையான அளவு
-------------------------------------------------
பாஸ்மதி அரிசி வேகவைக்கும் பொழுது:
-------------------------------------------------
சீரகம் – 1 தே.கரண்டி
பட்டை , கிராம்பு, ஏலக்காய் – 1
உப்பு – தேவையான அளவு
நெய் – 1 மேஜை கரண்டி
செய்முறை:
வெங்காயத்தினை நீளமாக வெட்டி கொள்ளவும். அதனை ஒரு paper towelயில் சிறிது நேரம் வைத்தால் அதில் உள்ள தண்ணீர் எல்லாம் பேப்பர் இழுத்து கொள்ளவும். இதன் பிறகு இதனை எண்ணெயில் பொரித்தால் எண்ணெய் இழுக்காது…வெங்காயமும் கிரிஸ்பியாக இருக்கும்.
நான் இதனை அவனில் வறுத்து எடுத்தேன். அவனை 450Fயில் மூற்சூடு செய்து கொள்ளவும். வெங்காயத்துடன் தேவையான அளவு உப்பு + 1 தே.கரண்டி எண்ணெய் ஊற்றி கலந்து கொள்ளவும்.
வெங்காயத்தினை அவனில் வைக்கும் ட்ரேயில் வைத்து மூற்சூடு செய்யபட்ட அவனில் சுமார் 10 – 15 நிமிடங்கள் Broil Modeயில் வேகவிடவும். எளிதில் செய்ய கூடிய வெங்காய ப்ரை ரெடி. (இதனை முன்பே செய்து வைத்து கொள்ளலாம்.)
சிக்கனை மீடியம் அளவு துண்டுகளாக வெட்டி கொள்ளவும். சிக்கனுடன் ஊறவைக்க கொடுத்துள்ள பொருட்களை அனைத்தும் முதலில் கலந்து கொள்ளவும்.
அத்துடன் சிக்கனை சேர்த்து நன்றாக பிரட்டி குறைந்தது 1 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும். (உப்பு சரி பார்த்து கொள்ளவும்.)
பாஸ்மதி அரிசியினை தண்ணீரில் குறைந்தது 15 – 20 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும்.
பெரிய பாத்திரத்தில் முக்கால் பாகம் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்கவிடவும். தண்ணீர் கொதிக்கும் பொழுது, ஊறவைத்துள்ள அரிசி + சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் + நெய் + தேவையான அளவு உப்பு சேர்த்து அரிசி சுமார் 50% (அரைவாசி) வேகவைத்து தண்ணீரினை வடித்து கொள்ளவும். (கவனிக்க: சாதம் அதிகம் வெந்துவிட்டால் பிரியாணி நன்றாக இருக்காது.)
அடி அகலமான கனமான பாத்திரத்தில் முதலில் 1 மேஜை கரண்டி நெய் + எண்ணெய் கொள்ளவும். அத்துடன் ஊறவைத்துள்ள சிக்கன் + 1/2 கப் தண்ணீர் ஊற்றி சமபடுத்தி கொள்ளவும். (ஒரே அளவில் எல்லா இடத்திலும் சிக்கன் இருக்கும்படி சமம் செய்து கொள்ளவும்.)
சிக்கன் சேர்த்த பிறகு அதன் மீது வேகவைத்துள்ள சாதத்தினை சேர்க்கவும்.
அதன் பிறகு, புதினா + கொத்தமல்லி + பொரித்த வெங்காயம் சேர்க்கவும்.
பாத்திரத்தினை Aluminium Foil போட்டு காற்று வெளியே வராதவிதம் மூடவும். அதன் மீது தட்டி போடவும். (இதில் மிகவும் முக்கியம் காற்று வெளியே வராதமாதிரி பார்த்து கொள்வது. )
சுமார் 30 – 40 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து வேகவிடவும். அதன் பிறகு, உடனே பாத்திரத்தினை திறக்காமல் மேலும் 10 நிமிடங்கள் அப்படியே வைத்துவிடவும்
கடைசியில் பாத்திரத்தினை திறந்து மெதுவாக கிளறிவிடவும். சுவையான எளிதில் செய்யகூடிய பிரியாணி ரெடி.
குறிப்புகள்:
பாஸ்மதி அரிசியினை பாதி பாகம் வேகும் வரை வேகவைத்து கொள்ள வேண்டும்.
இதில் மிகவும் முக்கியமானது நாம் சமைக்கும் பாத்திரம். பாத்திரத்தினை அழுத்தமான மூடியால் மூடவேண்டும். வேகும் பொழுது காற்று வெளியில் வந்தால் கண்டிப்பாக பிரியாணி அடிபிடித்து கொள்ளவும். அதனால் காற்று வெளியில் வராமல் பார்த்து கொள்ள வேண்டும்.
ஆரஞ்ச் கலர், மஞ்சள் கலர் போன்றவை சேர்க்க விரும்பினால், தண்ணீருடன் சிறிது கலர் சேர்த்து சாதத்தின் மீது ஊற்றிவிடவும்.
சிக்கனை முதல் நாளே Marinate செய்து ப்ரிஜில் வைத்து கொண்டு அடுத்த நாள் பிரியாணி செய்யலாம்
உப்பினை சிக்கனை Marinate செய்யும் பொழுதும் சரி, அரிசியினை வேகவைக்கும் பொழுது சரி பார்த்து கண்டிப்பாக கொள்ளவும். ஏன் என்றால் உப்பினை பிரியாணியில் கடைசியில் சேர்க்க முடியாது.
சமைக்க தேவைப்படும் நேரம்: 30 – 40 நிமிடங்கள்
தக்காளி சேர்க்க வேண்டாம். வெங்காயத்தினை முதலிலேயே பொரித்து வைத்து கொண்டு பயன்படுத்த வேண்டும். (வதக்க கூடாது.)
இதனை பச்சடியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.