வெஜ் பிரியாணி (4)

on on on on off 1 - Great!
4 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி - ஒரு படி ( எட்டு ஆழாக்கு)

டால்டா - 200 கிராம்

எண்ணெய் - 200 கிராம்

வெங்காயம் - அரை கிலோ

தக்காளி - அரை கிலோ

இஞ்சி - 150 கிராம்

பூண்டு - 75 கிராம்

தயிர் - ஒரு ஆழாக்கு

பச்சை மிளகாய் - 11

கொத்தமல்லி தழை - ஒரு கட்டு

புதினா - அரை கட்டு

மிளகாய் தூள் - மூன்று தேக்கரண்டி

எலுமிச்சை பழம் - ஒன்று

பட்டை - ஒரு இன்ச் அளவு (மூன்று)

கிராம்பு - மூன்று

ஏலக்காய் - இரண்டு

உப்பு - தேவையான அளவு

ரெட் கலர் பொடி - சிறிது

காய்கள் - மொத்தம் ஒரு கிலோ

உருளைக்கிழங்கு - 400 கிராம்

கேரட் - 1/4 கிலோ

பீன்ஸ் - 150 கிராம்

பட்டாணி - 150 கிராம்

பீட்ரூட் - 100 கிராம்

செய்முறை:

அரிசியை அரை மணிநேரம் ஊற வைக்கவும்

பிரியாணி தாளிக்கும் பெரிய சட்டியில் எண்ணெய், டால்டா ஊற்றி காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், கிராம்புவை போடவும்.

பிறகு வெங்காயம் முழுவதும் நீளமாக நறுக்கி போட்டு நன்கு வதக்கி நிறம் மாறியதும்,பூண்டை போட்டு கிளறவும். அடுத்து கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய் ஒடித்து போட்டு கிளறி தீயை சிம்மில் வைக்கவும்.

ஐந்து நிமிடம் கழித்து காய்களில் முதலில் உருளைக்கிழங்கை பெரிய துண்டுகளாக போடவும், கேரட்டை வட்ட வடிவமாக கொஞ்சம் தடிமனாக வெட்டி போடுங்கள் இல்லையென்றால் காய்கள் குழைந்து விடும்.

காய்களை ஒன்றன் பின் ஒன்றாக வதக்கவும். அதில் தக்காளியை நான்காக நறுக்கி போட்டு, மிளகாய் தூள், மஞ்சள் துள், உப்பு போட்டு வதக்கி மூடி போட்டு சிம்மில் இரண்டு நிமிடம் விடவும். பிறகு தயிரை அடித்து கலக்கி ஊற்றி நன்கு கிளறி, அரை மூடி எலுமிச்சைப்பழத்தை பிழிந்து பத்து நிமிடம் வைத்து இறக்கவும். எல்லாவற்றையும் தண்ணீர் இல்லாமல் வடித்து தான் போட வேண்டும்.

பக்கத்தில் இது வேகுவதற்குள் உலையை கொதிக்க வைத்து தாராளமாக பெரிய சட்டியை வைக்கவும்.

அதற்கென்று அன்டாவை ஏற்றி விடவேண்டாம். ஒரு படி ஆக்கும் சட்டி, உலை கொதித்ததும் அரிசியை வடிகட்டி போடவும். (புளி வடிகட்டியால் கூட போடலாம்)

தேவையான அளவு உப்பு சேர்க்கவும் முக்கால் பதம் வந்ததும் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு, அரை முடி எலுமிச்சை சாறு பிழியவும்.

உடனே ஒரு பெரிய கண் வடிகட்டியில் கொட்டி விடவேண்டும். அதிலுள்ள கஞ்சி தண்ணீரை தூர ஊற்ற வேண்டாம்.

இப்போது கிரேவியில் இந்த சாதத்தை கொட்டி சமப்படுத்தி, நெய் சிறிது ஊற்றி, ரெட் கலர் பொடியை ஒரு தேக்கரண்டி கஞ்சியில் கரைத்து ஊற்றி சாதம் மீது தெளிக்கவும்.

இப்போது தம் போடவும்.

தம் என்பது அரிசி சாதத்தை புழுங்க விடுவது. தீயை நல்ல குறைத்து சிம்மில் வைத்து அதன் மீது தோசை தவ்வா (அ) பிஸ்கேட் டின் மூடி (அ) தம் போடும் கருவி வைத்து பிரியாணி சட்டியை ஏற்றி மூடி போட்டு வடித்த கஞ்சி சட்டியை ஏற்றி பத்து நிமிடம் கழித்து லேசாக ஒரு கிளறு கிளறி மறுபடியும் பத்து நிமிடம் தம் போடவும்.

சுவையான வெஜ் பிரியாணி ரெடி.

குறிப்புகள்: