வெஜ் பிரியாணி (3)
தேவையான பொருட்கள்:
தரமான பாசுமதி அரிசி - 300 கிராம்
தக்காளி - 150 கிராம்
வெங்காயம் - 150 கிராம்
உருளை - 100 கிராம்
கேரட் - 100 கிராம்
பட்டாணி, பீன்ஸ், கார்ன் - 75 கிராம் (தலா 25 கிராம்)
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - ருசிக்கு தேவையான அளவு
தயிர் - இரண்டு மேசைக்கரண்டி
எலுமிச்சை பழம் - பாதி
பச்சை மிளகாய் - இரண்டு
கொத்தமல்லி தழை - கால் கட்டு
புதினா - கால் கட்டு
எண்ணெய் - 75 மில்லி
நெய் - இரண்டு தேக்கரண்டி
பட்டை, கிராம்பு, ஏலம் - தலா ஒன்று
செய்முறை:
வெங்காயம், தக்காளி, காய்கறிகளை நறுக்கி வைக்கவும். அரிசியை 20 நிமிடம் ஊற வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் மற்றும் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வெடிக்க விட்டு வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, தக்காளி, பச்சை மிளகாய், முக்கால் பாகம் கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கி மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறி சிம்மில் வைத்து தக்காளி சிறிது மசியும் வரை வேக விடவும்.
தக்காளி வதங்கியதும் அதில் உருளை, பீன்ஸ், கேரட் சேர்த்து கிளறி 5 நிமிடம் வேக விடவும்.
அதன் பிறகு கார்ன், பட்டாணி, தயிர் சேர்த்து கிளறி சிம்மில் வைத்து ஐந்து நிமிடம் நன்கு திக்காக விடவும்.
தண்ணீர் அளந்து ஊற்றவும், 300 கிராம் அரிசி என்பது ஒன்றரை ஆழாக்கு (டம்ளர்) வரும், ஒன்றரை டம்ளருக்கு ஒன்றரை மடங்கு பங்கு தண்ணீர் ஊற்றவும். 1 1/2 + 3/4 டம்ளர்.
தண்ணீர் ஊற்றி கிளறி விட்டு ஒரு கொதி வந்ததும் அரிசியை போடவும்.
முக்கால் பாகம் வெந்து வரும் போது மீதி உள்ள கொத்தமல்லி, புதினா, ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து குக்கரை மூடி வெயிட் போட்டு தீயின் அனலை மிதமாக வைத்து இரண்டு விசில் விட்டு மூன்றாவது விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
ஐந்து நிமிடம் கழித்து ஆவி அடங்கியதும் குக்கரை திறந்து கிளறி விடவும்.
சுவையான வெஜ் பிரியாணி ரெடி.
குறிப்புகள்:
வெஜ் பிரியாணியில் இது குக்கர் முறை, இதை இன்னும் இரண்டு வகையில் செய்யலாம். தம் போட்டு மற்றும் கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய் அரைத்து ஊற்றி சிறிது தேங்காய் பால் சேர்த்தும் செய்யலாம். இது நான்கு நபர்கள் சாப்பிடும் அளவு, காய்கறி காலிஃப்ளவர், பீட்ரூட், கருணைக்கிழங்கு சேர்ப்பதாக இருந்தாலும் சேர்த்து கொள்ளலாம். உருளை, கேரட் அளவை சிறிது குறைத்து கொள்ளலாம்.
தயிர் பச்சடி, சாலடுடன் சாப்பிடவும்.