வெஜிடபுள் பிரியாணி (1)

on on on off off 2 - Good!
3 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அரிசி - 2 கப்

சிறிய உருளைக்கிழங்கு - 6

கேரட் - 2

நறுக்கிய முட்டைகோஸ் - 2 கப்

டோஃபு (Tofu) / பனீர் - 250 கிராம்

பெரிய வெங்காயம் - 2

தக்காளி - 2

பச்சைப்பட்டாணி - ஒரு கப்

பச்சை மிளகாய் - 5

ஏலக்காய் - 6 + 3

கிராம்பு - 5

கறுவாப்பட்டை - 4" துண்டு + ஒரு சிறிய துண்டு

பிரிஞ்சி இலை - 2

முந்திரி - 20

பிளம்ஸ் (Raisins) - 35 கிராம்

கொத்தமல்லித்தழை - 1/4 கப்

உப்பு - தேவையான அளவு

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - பொரிப்பதற்கு

பட்டர் / நெய் - 3 மேசைக்கரண்டி

மிளகாய்த்தூள் - சிறிது

செய்முறை:

பட்டாணியை சிறிது உப்பு போட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். அரிசியை களைந்து ஊற வைத்துக் கொள்ளவும்.

தக்காளியை சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். உருளைக்கிழங்கை நீளமானத் துண்டுகளாக நறுக்கவும். வெங்காயத்தை நீளமான சிறிய மெல்லிய துண்டுகளாக நறுக்கவும். கேரட்டை ஒரு அங்குல நீளமான மெல்லிய துண்டாக நறுக்கிக் கொள்ளவும்.

ரைஸ் குக்கரில் ஊற வைத்த அரிசியை போட்டு மஞ்சள் தூள், கறுவாப்பட்டை, 3 ஏலக்காய், பிரிஞ்சி இலை ஆகியவற்றை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குழைய விடாமல் வேக வைத்துக் கொள்ளவும். அரிசி அரைப்பதம் வெந்ததும் அதில் சிறிது உப்பு, 2 மேசைக்கரண்டி நெய் அல்லது பட்டர் சேர்த்து கிளறி விடவும்.

நறுக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்குடன் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து பிரட்டி பொரித்தெடுத்துக் கொள்ளவும்.

அதேப் போல் வெங்காயம், டோஃபு/பனீரையும் உப்பு, மிளகாய்தூள் சேர்த்து பிரட்டி பொரித்தெடுக்கவும்.

வாணலியில் ஏலக்காய், கிராம்பு, கறுவாபட்டையை போட்டு வறுத்து மிக்ஸியில் கொரகொரப்பாக பொடி செய்துக் கொள்ளவும்.

அதே வாணலியில் பட்டர் அல்லது நெய் ஊற்றி இரண்டாக உடைத்த முந்திரி, பிளம்ஸை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பெரியசீரகம் போட்டு பொரிய விடவும். அதனுடன் சிறிது உப்பு, நீளமாக நறுக்கிய பச்சை மிளகாய், கேரட், முட்டைகோஸ் போட்டு மூடி மிதமான தீயில் 7 - 8 நிமிடங்கள் வேக விடவும்.

அதன் பின்னர் வேக வைத்த காய்கறிகளுடன் நறுக்கின தக்காளியை போட்டு 4 - 5 நிமிடங்கள் கிளறி விடவும்.

தக்காளி கேரட், கோஸ் கலவையுடன் சேர்ந்ததும் வேக வைத்த பட்டாணி, வறுத்து பொடித்த தூள், சாதம் ஆகியவற்றை கொட்டி கிளறவும்.

பின்னர் பொரித்த உருளைக்கிழங்கு, பனீர்/டோஃபு, வெங்காயம் ஆகியவற்றைப் போட்டுக் கிளறவும். இறுதியாக பொரித்த முந்திரி மற்றும் பிளம்ஸை போட்டுக் கிளறவும்.

சுவையான கம கம வெஜிடபுள் பிரியாணி தயார்.

குறிப்புகள்:

இதனை பரிமாறும் தட்டில் வைத்து மேலே கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.