வான்கோழி பிரியாணி
தேவையான பொருட்கள்:
வான்கோழி கறி - 1 கிலோ
பல்லாரி - 3 பெரியது
தக்காளி - 3 பெரியது
பச்சை மிளகாய் - 7 பெரியது
புதினா தழை - 2 கட்டு
கொத்தமல்லி தழை - 2 கட்டு
ரம்பை இலை - 1
நெய் - 1/4 கிலோ
கருவா - 4 துண்டுகள்
ஏலம் - 7
கிராம்பு - 7
இஞ்சி பூண்டு விழுது - 2 மேசைக்கரண்டி
தயிர் - 4 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மசாலா தூள் - 4 மேசைக்கரண்டி
மிளகு தூள் - 1/4 தேக்கரண்டி
சோம்பு தூள் - 1/2 தேக்கரண்டி
பிரிஞ்சி இலை - சிறிதளவு
ரம்பை இலை - 1
பாசுமதி அரிசி - 1/2 கிலோ
முந்திரி பருப்பு - 20
உலர் திராட்சை - 20
பாதாம் பருப்பு - 20
கசகசா - 2 மேசைக்கரண்டி
தேங்காய் பால் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அரிசியை உப்பு போட்டு வேக வைத்து அரைவேக்காடாக வடித்து கொள்ளவும் .
நெய்யில் திராட்சை, முந்திரிப்பருப்பை வறுத்து தனியே வைக்கவும் .
பாதாம் பருப்பை ஊற வைத்து தோல் உரித்து கசகசவோடு சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளவும்.
பல்லாரி, தக்காளியை நீளவாக்கில் அரிந்து கொள்ளவும். கொத்தமல்லி புதினா தழையை பொடியாக நறுக்கி தனியே வைத்து கொள்ளவும்.
கறியில் மசாலா தூள், மஞ்சள் தூள், மிளகு தூள், சோம்பு தூள், உப்பு, தயிர், நீளவாக்கில் அரிந்த பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினாத் தழை போட்டு 1 மணி நேரம் ஊற வைக்கவும்
பெரிய குக்கரில் நெய் ஊற்றி சூடானதும் கருவா, ஏலம், கிராம்பு, கைபிடியளவு பல்லாரி, தக்காளி , ரம்பை இலை, பிரிஞ்சி இலை, சிறிதளவு கொத்தமல்லி, புதினா தழை, இஞ்சிபூண்டு விழுது, தயிர் 2 மேசைக் கரண்டி சேர்த்து தாளிக்கவும் .
பின் அதில் மீதி உள்ள தக்காளி, பல்லாரி, மீதி உள்ள மசாலா தூள், உப்பு சேர்த்து கிளறவும்.
மசாலா போட்டு பிரட்டி வைத்துள்ள கறியை தாளிப்பில் போட்டு நன்றாக பிரட்டவும் .
மசாலா நன்றாக சேர்ந்த பின்பு அரைத்த கசகசா, பாதாம் பருப்பு விழுது, தேங்காய் பால் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கிய பின்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 20 நிமிடங்கள் வேக விடவும் .
கறி வெந்ததும் தனியே எடுத்து வைக்கவும் .
மீண்டும் குக்கரில் வேக வைத்த அரிசியினை ஒரு அடுக்கு பரப்பி, அதன் மேல் வான் கோழி மசாலா கிரேவியினை மற்றொரு அடுக்காக பரப்பவும்.
தனியே எடுத்து வைத்த புதினா, கொத்தமல்லிதழைகளை தூவவும். மீதியுள்ள அரிசி, கறி கிரேவியை இதே போன்று அடுக்குகளாக பரப்பி வறுத்து வைத்த பருப்புகளை தூவி குக்கரை மூடி 10 நிமிடங்கள் மிதமான தீயில் தம்மில் போடவும்.