ரைஸ் குக்கர் தம் பிரியாணி
தேவையான பொருட்கள்:
பாஸ்மதிஅரிசி – 1 கிலோ
பால் – 1/2 லிட்டர்
குங்குமப்பூ – 1 பின்ச்
உப்பு – சுவைக்கு
----------------------------------------
கிரேவி தயாரிக்க
-----------------------------------------
மட்டன் – 1 1/2 கிலோ
வெங்காயம் – 750 கிராம்
நாட்டுத்தக்காளி – 500 அல்லது 600 கிராம்
தயிர் – 1/2 கப்
எலுமிச்சை – 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 100 கிராம்
புதினா – 1 கப்
மல்லித்தழை – 2 கப்
பச்சைமிளகாய் – 7
பாதாம் – 10
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
சீரகத்தூள் – 1 டீஸ்பூன்
பட்டை – 2 துண்டு
கிராம்பு – 8
ஏலம் – 8
எண்ணெய் – 1/2 கப்
நெய் – 1/2 கப்
ரோஸ்வாட்டர் – 2 மேசைக்கரண்டி
உப்பு – சுவைக்கு
செய்முறை:
வெங்காயம், தக்காளி நீளமாக நறுக்கவும். புதினா, மல்லி சுத்தம் செய்து 1 1/2 கப் அளவில் எடுத்துக்கொள்ளவும்.
பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய், பாதி அளவு நெய் விட்டு சூடேறியதும் பட்டை, கிராம்பு, ஏலம் தாளித்து நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
பாத்திரத்தை மூடி விட்டால் நல்லது. வெந்து கொண்டிருக்கும் பொழுதே ஜிஞ்சர்கார்லிக் பேஸ்ட் சேர்க்கவும்.
பாதாம், காம்பு நீக்கிய பச்சைமிளகாய் இரண்டையும் சிறிது நீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.
கலவை நன்கு வதங்கி வரும் பொழுது அரைத்த விழுது, மல்லி, புதினா, உப்பு ஒவ்வொன்றாக சேர்க்கவும்.
பிரஷர்குக்கரில் மட்டனை சுத்தம் செய்து போடவும். கூடவே 1 ஸ்பூன் ஜிஞ்சர் கார்லிக்பேஸ்ட், மசாலா தூள்வகைகள், தயிர், உப்பு அனைத்தையும் கலந்து 2 விசில் வைக்கவும்.
2 விசிலுக்கு இறைச்சி வேகாவிட்டால் மூடியை எடுத்து விட்டு வேக விடவும். மட்டனும் வெந்து இருக்கவேண்டும். அதேநேரம் கிரேவியும் வற்றி இருக்கவேண்டும். இப்படி இறைச்சியை வேக வைக்கும் பொழுது நீர் சேர்க்கத்தேவையில்லை. தயிர் மட்டும் போதும்.
வற்றி, வெந்த இறைச்சியை வதக்கிய கலவையில் சேர்த்துக்கிளற வேண்டும்.
விஷேசங்களுக்கு பிரியாணி செய்வதாக இருந்தால் இந்த கலவையை முதல் நாளே தயார் செய்து ஆற விட்டு ஃப்ரிட்ஜில் வைக்கலாம். ஒரு டம்ளர் அரிசிக்கு 1 1/4டம்ளர் தண்ணீர் தான் அளவு. 1கிலோ பாஸ்மதி சுமார் 6டம்ளர் வரும். 6டம்ளர் பாஸ்மதிக்கு (1கிலோ) 7 1/2 டம்ளர் நீர் தேவை
பாலுடன் நீரும் கலந்து 7 1/2 டம்ளர் எடுத்துக்கொள்ளவும். இதில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய், எலுமிச்சைச்சாறு, குங்குமப்பூ, உப்பு கலந்து அரை மணிநேரம் ஊறிய அரிசியை சேர்த்து எலெக்டிரிக் ரைஸ் குக்கரில் வேக வைக்கவும்.
கீப்வார்ம் (keep warm) வந்ததும் சற்று நேரம் கழித்து வெந்த சாதத்தினை வேறு பாத்திரத்துக்கு மாற்றவும்.அதே எலெக்ட்ரிக் குக்கர் பாத்திரத்தில் பட்டர் பேப்பர் விரித்து, சாதத்தினை பரவலாகப் போடவும்.
அதன் மேலே மட்டன் கிரேவியை பரவலாகப் போடவும். சாதம் மாற்றி, கிரேவி லேயர்லேயராக போட்டு மீதி இருக்கும் நெய்யை தெளித்து கரண்டியால் கிளறி விடவும். பன்னீரையும் சேர்த்து சாதம் நொருங்காமல் கிளறவும்.
மீண்டும் ஸ்விட்ச்சை ஆன் செய்தால் 10 நிமிடங்களில் கீப் வார்ம் வந்து விடும். கீப்வார்ம் மோடில் (keep warm mode) சுமார் 1- 2 மணிநேரம் தம்மில் வைக்கவும்.
குறிப்புகள்:
அருமையான தம் பிரியாணி தயார். எவ்வளவு நேரம் தம்மில் வைக்கின்றோமோ அவ்வளவு தூரம் பிரியாணி சுவையாக இருக்கும். அதிக அளவு பிரியாணி செய்யும் பொழுது இந்த முறையில் செய்தால் நன்றாக பிரியாணி அமைந்து விடும்.