முட்டை பிரியாணி
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி - 3 கப்
முட்டை - 6
பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை - தலா இரண்டு
கேரட் - ஒன்று
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 4
தக்காளி - 3
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
பிரியாணி மசாலா தூள் - 3 தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - 2 மேசைக்கரண்டி
தேங்காய் பால் - ஒரு கப்
எண்ணெய் + நெய் - 2 மேசைக்கரண்டி
கொத்தமல்லித் தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முட்டையை வேக வைத்து தோலுரித்து லேசாக கீறி வைக்கவும். வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். தக்காளி, பச்சை மிளகாயை தனித்தனியே அரைத்து வைக்கவும். கேரட்டை மெல்லியதாக துருவி வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை போட்டு தாளித்து வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி மிளகாய் தூள், மஞ்சள் தூள், பச்சை மிளகாய் விழுது சேர்த்து வதக்கவும்.
அதனுடன் பிரியாணி மசாலா தூள், துருவிய கேரட் போட்டு கிளறி விடவும்.
பின் தக்காளி விழுது சேர்த்து வதக்கி தேங்காய் பால், கொத்தமல்லித் தழை சேர்க்கவும்.
அரிசியை களைந்து சேர்த்து, அதனுடன் வேக வைத்த முட்டை, உப்பு சேர்த்து 5 நிமிடம் மசாலா சுருள வேக விடவும். பின் முட்டையை தனியே எடுத்து வைத்து விட்டு, 5 கப் தண்ணீர் விட்டு வெயிட் போடாமல் மூடி போட்டு ஆவி வந்ததும் 15 நிமிடம் சிம்மில் வேக விடவும். சுவையான முட்டை பிரியாணி ரெடி.