மீன் பிரியாணி (3)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி - 3 டீ கப் (தண்ணீரில் ஒரு மணிநேரம் ஊறியது)

(அதல், காக்கை, கொடுவா ) மீன் துண்டுகள் - 6

எண்ணெய் - அரை கப்

பட்டை, கிராம்பு, ஏலம் - தலா 2

பெரிய வெங்காயம் - 2

தக்காளி - 2

பச்சை மிளகாய் - 3

இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி

புதினா, மல்லி இலை - சிறிதளவு

மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

கரம் மசாலா பொடி - ஒரு தேக்கரண்டி

தயிர் - அரை கப்

உப்பு - தேவையான அளவு

தயிர் பச்சடி செய்வதற்கு:

தயிர் - 3/4 கப்

பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - ஒன்று

பொடியாக நறுக்கிய கேரட் - சிறு துண்டு

பொடியாக நறுக்கிய மல்லி - சிறிதளவு

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒன்று

உப்பு - அரை தேக்கரண்டி

செய்முறை:

வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை நீளவாக்கில் நறுக்கி வைக்க வேண்டும். மற்ற பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.

மீனை சுத்தம் செய்து அதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து சிறிது நேரம் கழித்து எண்ணெயில் முறுகாமல் அரை பாகம் வேகும் அளவு பொரித்து தனியே எடுத்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலம் போட்டு பொரிந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.

அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு தக்காளி, சிறிது மஞ்சள் தூள், மிளகாய் தூள், மசாலா தூள், உப்பு சேர்த்து வதக்கிய பின் தயிர், மல்லி இலை சேர்த்து கிளறவும்.

பிறகு பொரித்த மீன் துண்டுகளை மசாலா கலவையில் போட்டு மூட வேண்டும்.

ஒரு கப் அரிசிக்கு 1.5 கப் தண்ணீர் விகிதம் 3 கப் அரிசிக்கு 4 கப் (அரை கப் குறைத்துக்கொள்ள வேண்டும்) தண்ணீர் ஊற்றி தனியே ரைஸ் குக்கரில் சாதம் செய்யவும். கொதி வரும் போது அரை ஸ்பூன் எண்ணெய் சேர்த்தால் சாதம் தனித்தனியே வரும்.

மசாலா கலவையில் மீன் வெந்ததும் மீனை தனியே எடுத்துவிட்டு சாதத்தை அதில் கொட்டி கிளற வேண்டும்.

கிளறியவுடன் சாதத்தின் மேல் மீன் துண்டுகளை போட்டு, புதினா, மல்லி இலை சேர்க்கவும்.

பிறகு பாயில் பேப்பர் கொண்டு மூடவேண்டும்.(மிதமான தீயில்) கால் மணிநேரம் கழித்து இறக்க வேண்டும்.

தயிர் பச்சடிக்கு தேவையானப்பொருட்களில் சொன்னதுபோல் எல்லாவற்றையும் தனியே நறுக்கி வைக்கவும்.

பிறகு அனைத்தையும் ஒரு பவுலில் போட்டு பிசைந்து பிரிட்ஜில் கால் மணிநேரம் வைத்திருந்து பரிமாறவும்.

குறிப்புகள்: