மீன் பிரியாணி (2)
தேவையான பொருட்கள்:
பெரிய மீன் - இரண்டு கிலோ
பாசுமதி அரிசி - ஏழு கப்
வெங்காயம் - ஐந்து
தக்காளி - ஐந்து
பச்சைமிளகாய்- மூன்று
மல்லி கட்டு - ஒன்று
புதினா கட்டு - ஒன்று
இஞ்சி பூண்டு விழுது - நான்கு மேசைக்கரண்டி
மிளகாய் பொடி - இரண்டு தேக்கரண்டி
மல்லி பொடி - மூன்று மேசைக்கரண்டி
மீன் பிரியாணி மசாலா - மூன்று மேசைக்கரண்டி
கலர் பவுடர் - சிறிது
மீனில் தடவும் மசாலா செய்ய:
மல்லி பொடி - மூன்று மேசைக்கரண்டி
மிளகாய் பொடி - இரண்டு மேசைக்கரண்டி
சோம்பு - இரண்டு மேசைக்கரண்டி
மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி
இஞ்சி - ஒரு துண்டு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா மூன்று
எண்ணெய் - தாளிக்க
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயத்தை பொடியாக நீளவாக்கில் நறுக்கவும். தேவையான இஞ்சி பூண்டையும் எடுத்துக் கொள்ளவும். மீனில் தடவ வேண்டிய மசாலா பொருட்களை மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
மல்லி தழையை பொடியாக நறுக்கவும், புதினாவையும் அதைப் போல் நறுக்கவும் பச்சைமிளகாயை கீறி வைக்கவும். தக்காளியையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.
பின்னர் மீனை சுத்தம் செய்து அரைத்த மசாலாவை அதன் மேல் தடவி அரை மணி நேரம் ஊற விடவும்.
மீன் ஊறியவுடன் ஃப்ரை பேனில் எண்ணெய் ஊற்றி மீனை போடவும். மீன் சிறிது வெந்தவுடன் திருப்பி விடவும். மீனை முறுகலாக வறுக்க கூடாது. சிறிது நேரம் சிவக்கும் வரை வறுத்தால் போதும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்து சிறிதளவு வெங்காயத்தை எடுத்து வைத்து கொண்டு மீதமுள்ள வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்கு முறுகலாக வதங்கியவுடன் தக்காளி போட்டு வதக்கவும். பின் இஞ்சி பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பின்னர் மல்லி, புதினா போட்டு கிளறி விட்டு மல்லி தூள், மிளகாய் தூள், பிரியாணி மசாலா போட்டு உப்பு சிறிது போட்டு கிளறவும்.
வறுத்த மீன் துண்டுகளை அதன் மேல் சிறிது நேரம் வைத்து பின் மீனை எடுத்து விடவும்.
வேறு ஒரு பாத்திரத்தில் அரிசியை கொட்டி நீரில் இருபது நிமிடம் ஊற விடவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி எடுத்து வைத்திருந்த சிறிது வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வதங்கியதும் அதில் ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் வீதம் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் அரிசியை போட்டு உப்பு போட்டு முக்கால் பதத்துக்கு வேக வைக்கவும்.
வெந்ததும் வதங்கிய கிரேவி மேல் சாதத்தை கொட்டவும். அதன் மேல் கலர் பொடியை சிறிது நீரில் கரைத்து சுற்றிலும் ஊற்றவும். பின் சாதத்தை கிளறி அதன் மேல் மீன் துண்டுகளை வைத்து அதன் மேல் சாதத்தை போட்டு மூடி அடுப்பை சிம்மில் வைத்து பதினைந்து நிமிடம் தம்மில் போடவும்.
சூடான மீன் பிரியாணி தயாராகி விட்டது.