மீன் இறால் பிரியாணி
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - அரைக்கிலோ
மீன் - அரைக்கிலோ
இறால் - கால் கிலோ
வெங்காயம் - இரண்டு
இஞ்சி விழுது - ஒரு தேக்கரண்டி
பூண்டு - ஆறு
பச்சை பட்டாணி - அரை கோப்பை
சோளம் - அரைக்கோப்பை
எலுமிச்சைரசம் - ஒரு மேசைக்கரண்டி
மிளகாய்தூள் - இரண்டு தேக்கரண்டி
தனியாத்தூள் - இரண்டு தேக்கரண்டி
மஞ்சள்தூள் - ஒரு தேக்கரண்டி
சீரகத்தூள் - அரைதேக்கரண்டி
மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி
பட்டை - இரண்டு துண்டு
கிராம்பு - நான்கு
கொத்தமல்லி - ஒரு கட்டு
புதினா - அரை கட்டு
உப்புத்தூள் - இரண்டு தேக்கரண்டி
எண்ணெய் - கால் கோப்பை
நெய் - ஒரு மேசைக்கரண்டி
செய்முறை:
மீனை நன்கு கழுவி துண்டுகள் செய்யவும். சதை பற்றுள்ள மீனாக தேர்ந்தெடுக்கவும். பிறகு இறாலை நன்கு சுத்தம் செய்து வைக்கவும்.
வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். பூண்டை தட்டி வைக்கவும்.
பிரியாணி செய்யும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி காய வைக்கவும். பிறகு பட்டை கிராம்பை போடவும்.
தொடர்ந்து வெங்காயத்தை போட்டு பூண்டையும் போட்டு நன்கு வதக்கவும். பின்பு இஞ்சி விழுதைப்போட்டு எல்லாத்தூளையும் போட்டு வதக்கி அரிசியை கழுவி நீரை நன்குவடிகட்டி இதில் போடவும்.
பிறகு அரிசி நன்கு எண்ணெயில் வெந்து கண்ணாடி மாதிரி ஆனவுடன் மீன், இறால், பச்சைபட்டாணி, சோளம் ஆகியவற்றை சேர்த்து கிளறி விடவும்.
பிறகு நான்கு கோப்பை சுடு தண்ணீரை ஊற்றி கலக்கி கொதிக்கவிடவும். நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் பொழுது மூடியை போடவும்.
பத்து நிமிடம் கழித்து அடுப்பின் அனலை குறைத்து விடவும். பிறகு மேலும் பத்து நிமிடம் குறைந்த அனலில் வைத்திருந்து மூடியை திறந்து எலுமிச்சைரசத்தை தெளிக்கவும்.
சிறிது ஆறியவுடன் புதினா கொத்தமல்லியை தூவி முள்ளுக் கரண்டியைக் கொண்டு கிளறி விட்டு நெய்யை ஊற்றி பரிமாறவும்.