மஷ்ரூம் பிரியாணி
தேவையான பொருட்கள்:
1. பாசுமதி அரிசி - 2 கப்
2. மஷ்ரூம் - 10 - 15
3. வெங்காயம் - 1 பெரிது
4. தக்காளி - 1 பெரிது
5. பச்சை மிளகாய் - 2
6. தயிர் - 2 மேஜைக்கரண்டி
7. மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
8. கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
9. பிரியாணி மசாலா - 1 தேக்கரண்டி
10. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
11. இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி
12. தேங்காய் பால் - 2 கப்
13. உப்பு
தாளிக்க:
14. பிரியாணி இலை - 1
15. அன்னாசி பூ - 1/2
16. ஏலக்காய் - 2
17. எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
அரைக்க:
18. வெங்காயம் - 1/2
19. தக்காளி - 1/2
20. மிளகு - 1 தேக்கரண்டி
21. சீரகம் - 1/2 தேக்கரண்டி
22. கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
அரைக்க வேண்டிய பொருட்களை அரைத்து வைக்கவும். நீர் சேர்க்க தேவை இல்லை. சேர்ப்பதானால் மிக குறைவாக சேர்க்கவும்.
அரிசியை கழுவி ஊற வைக்கவும்.
மஷ்ரூம் சுத்தம் செய்து 4 துண்டாக நறுக்கி வைக்கவும்.
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் நறுக்கி வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பிரியாணி இலை, ஆன்னாசி பூ, ஏலக்காய் தாளிக்கவும்.
இதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சிவந்ததும் தக்காளி, சிறிது உப்பும் சேர்த்து வதக்கவும்.
தக்காளி பாதி வதங்கியதும் அரைத்த விழுது சேர்த்து வதக்கவும். இதை மூடி வைத்து இடை இடையே எடுத்து கலந்து விட்டு வதக்கவும். நன்றாக குழைந்து எண்ணெய் பிரிந்து வரும்.
இதில் தூள் வகை எல்லாம் சேர்த்து கலந்து விடவும்.
இத்துடன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
கலவை ஒன்றாக கலந்து வந்ததும் மஷ்ரூம் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். மூடிவிட வேண்டாம்.
இதில் தேங்காய் பால் மற்றும் 1 1/2 கப் நீர் விட்டு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
கொதி வந்ததும் அரிசி சேர்த்து கலந்து மீண்டும் ஒரு கொதி விடவும்.
ஒரு கொதி வந்ததும் சிறுந்தீயில் வைத்து மூடி வேக விடவும்.
நன்றாக வெந்ததும் அடுப்பில் இருந்து எடுத்து குழையாமல் ஒரு முறை கலந்து மூடி வைக்கவும். சுவையான ஸ்பைசி மஷ்ரூம் பிரியாணி தயார்.