மட்டன் பிரியாணி (6)
தேவையான பொருட்கள்:
மட்டன் - ஒரு கிலோ
பாசுமதி அரிசி - நான்கு கப்
தயிர் - ஒரு கப்
மஞ்சள்தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகாய்தூள் - ஒரு தேக்கரண்டி
வெங்காயம் - இரண்டு
தக்காளி - இரண்டு
பச்சைமிளகாய் - எட்டு
இஞ்சிபூண்டு விழுது - மூன்று மேசைக்கரண்டி
புதினா இலை - ஒரு கப்
துறுவிய இஞ்சி - ஒரு மேசைக்கரண்டி
கொத்துமல்லி இலை - ஒரு கப்
கருஞ்சீரகம் - அரை தேக்கரண்டி
பிரியாணி இலை - இரண்டு
ஏலக்காய் - ஆறு
பட்டை - ஒரு குச்சி
கிராம்பு - ஐந்து
எண்ணெய் - ஒரு கப்
நெய் - அரை கப்
எலுமிச்சம் பழம் - ஒன்று
செய்முறை:
மட்டனை நன்கு கழுவி, துடைத்துவிட்டு, ஒரு கடாயில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெயில் மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து கொஞ்சம் வாசம் குறையும் வரை வதக்கிக் கொள்ளவும்.
பச்சைமிளகாயை கீறி வைத்துக் கொள்ளவும். பட்டை, மூன்று ஏலக்காய் மற்றும் கிராம்பை மிக்சியில் பொடித்துக் கொள்ளவும்.
ஆறிய மட்டனுடன் தயிர், துருவிய இஞ்சி, மூன்று பச்சை மிளகாய், மூன்று பொடித்த ஏலக்காய், பிரியாணி இலை, மிளகாய் தூள், கருஞ்சீரகம் சேர்த்து மூன்று மணி நேரம் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கவும்.
அரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். வெங்காயம் மற்றும் தக்காளியை நீளமாக அரிந்துக் கொள்ளவும்.
ஒரு அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும், பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை வதக்கவும்.
வெங்காயம் வதங்கியவுடன் இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
தக்காளி, புதினா இலை, கொத்தமல்லி இலை சேர்த்து எண்ணெய் வெளிவரும் வரை வதக்கவும்.
இப்போது பட்டை, கிராம்பு, ஏலக்காய் பொடி சேர்த்து வதக்கவும். ஊறிய மட்டனை சேர்த்து வதக்கவும்.
மட்டன் பாதி வெந்தவுடன் ஆறு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
உப்பு சரியாக உள்ளதா என் பார்த்துக் கொள்ளவும். இல்லையேல் போட்டுக் கொள்ளவும்.
அரிசியில் இருந்த தண்ணீரை வடித்துவிட்டு அதில் போட்டு கிளறி தீயை குறைத்து விட்டு மூடி போடவும். அவ்வப்போது திறந்து கிளறவும்.
அரிசி வெந்தவுடன் எலுமிச்சம் பழ சாற்றை பிழிந்து ஒரு முறை கிளறி விட்டு மூடி போட்டு அடுப்பை அணைத்து விடவும்.