மட்டன் பிரியாணி (4)
தேவையான பொருட்கள்:
பட்டை - 2
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
வெங்காயம் - 2 கைப்பிடி
பூண்டு - 2 தேக்கரண்டி
இஞ்சி - 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2 அல்லது 3 காரத்திற்கேற்ப
புதினா - ஒரு கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
தக்காளி - ஒரு கைப்பிடி (ஒன்று அல்லது 2 பழம்)
கெட்டியான தயிர் - 2 தேக்கரண்டி
மட்டன் - அரை கிலோ
மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி
மல்லி தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிதளவு
கரம் மசாலா தூள் - தேவையான அளவு
எலுமிச்சை - ஒரு பழம் (சிறியது)
கேசரி பவுடர் - சிறிதளவு
நெய் - ஒரு பெரிய ஸ்பூன் அளவு
எண்ணெய் - 2 பெரிய ஸ்பூன் அளவு
உப்பு - தேவையான அளவு
பாஸ்மதி அரிசி - அரை கிலோ அல்லது 2 கப்
தண்ணீர் - ஒரு கப் அரிசிக்கு 1 3 /4 கப் தண்ணீர் (இங்கே கொடுத்துள்ள அளவுக்கு 3 1 /2 கப் தண்ணீர் சேர்க்கவும்).
செய்முறை:
பிரியாணி செய்வதற்கு மேற்சொன்ன தேவையானப் பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும். வெங்காயத்தை மெல்லியதாக நீளமாக நறுக்கி வைக்கவும். மிளகாயை நடுவில் கீறி வைக்கவும். அரிசியை தண்ணீரில் களைந்து ஊற வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நெய், எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளிக்கவும். அதனுடன் நறுக்கின வெங்காயத்தை போட்டு கருகவிடாமல் சிவப்பு நிறமாக மாறும் வரை வதக்கவும்.
பிறகு இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை அடிப்பிடிக்காமல் கிளறவும். அதனுடன் கீறின பச்சைமிளகாய், கொத்தமல்லித்தழை, புதினா இலை சேர்த்து ஒரு முறை வதக்கிக் கொள்ளவும். பிறகு தக்காளி, தூள் வகைகள், தயிர் மற்றும் உப்பு சேர்த்து கிளறி விட்டு, அதனுடன் மட்டன் துண்டுகளை சேர்த்து ஒரு முறை கிளறி எண்ணெய் பிரியும் வரை மூடி வைக்கவும்.
எண்ணெய் பிரிய தொடங்கியதும் அதில் பாதி அளவு தண்ணீர் சேர்த்து 4 முதல் 5 விசில் விடவும். (கறியை பொறுத்து 2 விசில் அதிகமாகவும் விடலாம்).
கறி வெந்தவுடன் அதில் மீதமுள்ள தண்ணீரையும் சேர்த்து கொதிக்க விடவும். பிறகு எலுமிச்சைச்சாறு சேர்க்கவும். உப்பு தேவையெனில் சேர்த்து கொள்ளலாம்.
பிறகு களைந்து வைத்திருக்கும் அரிசியை போட்டு கொதிக்க விடவும். கொதிக்கும் போது மூடி வைத்தால் சீக்கிரம் தண்ணீர் வற்றிவிடும்.
கரண்டியில் கிளறும்போது தண்ணீர் அதிகம் இல்லாமல் குறைவாக இருந்தால் அடுப்பை சிம்மில் வைத்து பாத்திரத்தின் மேல் அலுமினியம் பாயில் அல்லது நியூஸ் பேப்பரை வைக்கவும். அதன் மேலே பாத்திரத்துக்கு தகுந்தாற்போல் தட்டு வைத்து, அதன் மேல் மற்றொரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி மூடி வைக்கவும்.
ஐந்து நிமிடம் கழித்து கவனமாக அலுமினியம் பாயிலை எடுத்து சாதத்தை அடியிலிருந்து கிளறாமல் மேலாக கிளறி அதன் மேல் சிறிதளவு தண்ணீரில் கரைத்த கேசரி பவுடர், புதினா, கொத்தமல்லி இலைகளை தூவி முன்பு மூடி வைத்தது போல் வைத்து 5 நிமிடம் தம்மில் விடவும்.
பிறகு மீண்டும் கவனமாக அலுமினியம் பாயிலை எடுத்து சாதத்தை அடியிலிருந்து கிளறாமல் மேலாக கிளறி அடுப்பை அணைத்து விடவும்.
சுவையான மட்டன் பிரியாணி ரெடி.
குறிப்புகள்:
இந்த பிரியாணியுடன் தாளிச்சா, தயிர் பச்சடி, எண்ணெய் கத்தரிக்காய் மற்றும் ஒரு ஸ்வீட்டுடன் பரிமாறினால் சுவையாக இருக்கும்.