மட்டன் பிரியாணி (3)

on on on on off 3 - Great!
4 நட்சத்திரங்கள் - 3 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

மட்டன் - ஒரு கிலோ

பாசுமதி அரிசி - நான்கு கப்

இஞ்சி பூண்டு விழுது - ஐந்து தேக்கரண்டி

வெங்காயம் - ஐந்து (பெரியது)

தக்காளி - நான்கு (பெரியது)

மல்லி புதினா இலை - தலா ஒரு கைப்பிடி

பச்சைமிளகாய் - நான்கு

தயிர் - ஒரு கப்

பிரியாணி மசாலா - ஐந்து தேக்கரண்டி

பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரிஞ்சி இலை - தலா மூன்று

எண்ணெய், நெய், உப்பு - தேவையானளவு

செய்முறை:

முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் சட்டியை வைத்து நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை போட்டு பின் நறுக்கிய வெங்காயம், மல்லி, புதினா போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்கு பொன்னிறமாக வதங்க வேண்டும் வதங்கிய உடன் இஞ்சி பூண்டு விழுது போட்டு நன்கு பொன்னிறமாக வதக்கவும்.

அடுத்து ஒரு பக்கம் தக்காளி மற்றொரு பக்கம் மட்டன், பச்சைமிளகாய் போட்டு சிறிது நேரம் கழித்து கிண்டவும்

ஒரு கப்பில் தயிரை போட்டு அதில் பிரியானி மசாலாவை போட்டு சிறிது நீர் விட்டு பேஸ்ட் போல் கலக்கி வைத்துக் கொள்ளவும்.

இந்த கலவையை சட்டியில் வெந்து கொண்டிருக்கும் மட்டன் மேல் போட்டு உப்பும் போட்டு கிளறவும். பின் மூடி வேக விடவும். தண்ணீர் சிறிது சேர்த்தால் போதும் சிறிய தீயில் வேக விடவும்..

கிரேவி சுருண்டு படத்தில் உள்ளது போல் வரும்.

அடுத்து ஒரு சட்டியில் ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் என்று அளவில் தண்ணீர் வைத்து கொதிக்கவிட்டு (நான்கு கப் அரிசிக்கு ஆறுகப் தண்ணீர்). அதில் அரிசியை போட்டு சிறிது மஞ்சள் கலர் பவுடர், உப்பு போட்டு கொதிக்க விடவும். அரிசியில் உள்ள நீர் வற்றி வரும் போது சோறு பாதி வெந்துவிடும். படத்தில் உள்ளது போல சாதம் மேலே தெரியும்.

இந்த பதத்தில் வெந்து இருக்கும் மட்டன் கிரேவியில் சாதத்தை கொட்டி விடவும்.

அடுத்து பேப்பரோ இல்லையென்றால் ஃபாயில் பேப்பரோ கொண்டு மூடி போட்டு பதினைந்து நிமிடம் சிறு தீயில் தம்மில் போடவும்.

பின்னர் எடுத்து சாதம் உடையாமல் கிளறி மேல் அலங்கரிக்க முந்திரி, கிஸ்மிஸ், வெங்காயம் எண்ணெயில் பொரித்து போட்டால் டேஸ்ட்டியான மட்டன் பிரியாணி ரெடி.

குறிப்புகள்:

மட்டனை முதலில் குக்கரில் வேக வைத்தும் செய்யலாம்.