மட்டன் பிரியாணி (13)
தேவையான பொருட்கள்:
பிரியாணி அரிசி (பாஸ்மதி) - 3 1/2 கப்
கறி - முக்கால் கிலோ
தக்காளி - கால் கிலோ
வெங்காயம் - கால் கிலோ
நெய் - 2 மேசைக்கரண்டி
இஞ்சி விழுது - 2 மேசைக்கரண்டி
பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 7
தேங்காய் பால் - ஒன்றரை கப்
டால்டா - 100 கிராம்
பட்டை - 5
கிராம்பு - 7
ஏலக்காய் - 4
அன்னசிப்பூ, பிரிஞ்சி இலை
மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - அரை மேசைக்கரண்டி
புதினா - 4 கொத்து
கொத்தமல்லி - 4 கொத்து
சோம்பு - ஒரு தேக்கரண்டி
கசகசா - ஒரு தேக்கரண்டி
பூண்டு - 15 பல்
செய்முறை:
பெரிய வெங்காயம் மற்றும் தக்காளியை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறிக் கொள்ளவும். பூண்டை தோல் உரித்துக் கொள்ளவும். அரிசியை நன்கு களைந்து தண்ணீரை வடித்து விட்டு 15 நிமிடம் ஊறவைக்கவும். கறியை நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களையும் தயாராக எடுத்து வைக்கவும்.
குக்கரில் டால்டாவை போட்டு உருகியதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பூண்டு, கசகசா, சோம்பு, பூ மற்றும் இலை போட்டு தாளித்து, இஞ்சி விழுது, பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அதனுடன் வெங்காயம் போட்டு வதக்கிய பிறகு பச்சை மிளகாய், தக்காளி போட்டு வாசனை வரும் வரை வதக்கவும்.
பிறகு சுத்தம் செய்து வைத்திருக்கும் கறியை போட்டு நன்கு கிளறிவிடவும்.
பின்னர் கறியுடன் உப்பு, மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் போட்டு கிளறவும்.
கறி வேக 2 கப் தண்ணீர் ஊற்றி ஒரு முறை கிளறி விட்டு குக்கரை மூடி வைத்து வெய்ட் போட்டு 15 நிமிடங்கள் வேகவிடவும்.
15 நிமிடங்கள் கழித்து திறந்து கறி வெந்து எண்ணெய் மேலே மிதக்கும் போது கிளறி விட்டு தீயை குறைத்து வைத்து விடவும்.
கலவை நன்கு கொதிக்கும் முன்பு தேங்காய் பாலை ஊற்றி அதனுடன் ஒன்றே முக்கால் கப் தண்ணீர் ஊற்றி விடவும். கொத்தித்த பிறகு ஊற்றினால் தேங்காய் பால் திரிந்து விடும்.
பின்னர் கலவை நன்கு கொதித்து நுரை வரும் போது ஊற வைத்திருக்கும் அரிசியை போட்டு நன்கு ஒரு முறை அடியிலிருந்து கிளறிவிடவும்.
அதன் மேலே கொத்தமல்லி, புதினா தழையை தூவி கிளறிவிடவும். அரிசி முக்கால் பதம் வேகும் வரை குக்கரை மூடாமல் இடையில் கிளறிவிட்டுக் கொண்டே இருக்கவும்.
10 நிமிடம் கழித்து குக்கரை மூடி வெய்ட் போட்டு 12 நிமிடம் வரை வேக விடவும். 12 நிமிடம் கழித்து இறக்கி வைத்து விடவும்.
பிறகு குக்கரில் உள்ள பிரஷர் போன பிறகு திறந்து பிரியாணி மேலே நெய் ஊற்றி நன்கு கிளறி விட்டு சூடாக பரிமாறவும்.
சுவையான மட்டன் பிரியாணி தயார். இதை வெங்காய ரைத்தாவுடன் பரிமாறவும்.