மட்டன் பிரியாணி (11)
தேவையான பொருட்கள்:
மட்டன் - ஒரு கிலோ
பாஸ்மதி அரிசி - ஒரு கிலோ
பெரிய வெங்காயம் - 5
தக்காளி - 5
பச்சைமிளகாய் - 4
மல்லி - அரை கப்
புதினா - அரை கப்
மஞ்சள் தூள் - 1 1/2 தேக்கரண்டி
பிரியாணி மசாலாப் பொடி - ஒரு மேசைக்கரண்டி
மிளகாய்பொடி - ஒரு தேக்கரண்டி
பனீர் - 2 மேசைக்கரண்டி
கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை
பிரிஞ்சி இலை - 3
டவுன் பான்டா இலை - ஒன்று (2 அங்குல அகலத்தில் ஒரு முழம் நீளத்தில் இருக்கும்)
முந்திரி - 10
தயிர் - 400 மில்லி
பசு நெய் - 100 மில்லி
சன் ஃபிளவர் ஆயில் - 150 மில்லி
இஞ்சி - 100 கிராம்
பூண்டு - 100 கிராம்
உப்பு - தேவையான அளவு
பட்டை - 2 துண்டு
கிராம்பு - 5
ஏலம் - 4
செய்முறை:
முதலில் தக்காளி, மிளகாய், வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்துக்கொள்ளவும்.
இறைச்சியை கழுவிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டை தோல் நீக்கி அரைத்துக் கொள்ளவும்.
மல்லி புதினாவை கிள்ளி வைக்கவும். டவுன் பான்டா இலையை 3 துண்டாக நறுக்கவும்.
பாஸ்மதி அரிசியை கழுவி ஒரு குவளைக்கு 1 1/2 தண்ணீர் தேவையான உப்பு சேர்த்து எலெக்ட்ரிக் குக்கரில் சோறு ஆக்கி கொள்ளவும்.(குக்கர் வசதி இல்லாதவர்கள், கொதிக்கும் நீரில் அரிசியைப் போட்டு பொலபொலவென்று சோற்றை வடித்துக் கொள்ளலாம்)
சோறு வெந்தவுடன், பனீரில் கேசரி பவுடரை கலந்து சோற்றில் ஆங்காங்கே ஊற்றவும்.
இனி இறைச்சியில் உப்பு, பாதி மஞ்சள் பொடி, இஞ்சி பூண்டு விழுது அரைத்ததில் பாதி, தயிர் பாதி ஆகியவற்றை இறைச்சி மூழ்கும் அளவு நீர் சேர்த்து குக்கரில் போட்டு 20 நிமிடம் வேக வைத்து இறக்கவும்,
பின்பு வாயகன்ற பாத்திரத்தில் எண்ணெயை விட்டு, நறுக்கிய வெங்காயத்தில் பாதி வெங்காயத்தையும், முந்திரியையும் பொன்னிறமாக வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
பின்பு அதே எண்ணெயில் நெய்யையும் விட்டு அதில் பட்டை, கிராம்பு, ஏலம், பிரிஞ்சி இலை, டவுன் பான்டா இலை ஆகியவற்றை போட்டு அதிலேயே மீதமுள்ள வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
பின்பு அதில் பச்சைமிளகாய், தக்காளி போட்டு வதக்கவும். பின்பு மீதமுள்ள இஞ்சி பூண்டு போட்டு வதக்கவும். பின்பு மிளகாய்பொடி சேர்க்கவும்.
மேலும் அதில் பாக்கி தயிர், மல்லி புதினா, மஞ்சள்பொடி, பிரியாணி மசாலாப்பொடி (எனது பிரியாணி மசாலப்பொடி செய்முறைக் குறிப்பை பார்க்கவும்) போட்டு கிளறி அதில் வேக வைத்த இறைச்சியை போட்டு கிளறி மீதமுள்ள நீரைவிட்டு குறைந்த தீயில் கனியவிடவும்.
பின்பு வாயகன்ற ஒரு சட்டியில் ஒரு லேயர் சோறு அதன் மேல் வறுத்த வெங்காயம் முந்திரி மேலே தயார் செய்த இறைச்சி மசாலா கலவையை பரப்பினாற் போல் ஊற்றவும்.
இப்படியே அடுக்கடுக்காக எல்லா சோற்றையும் போட்டு நன்கு மூடி 20 நிமிடம் தம்போடவும். சுவையான பிரியாணி தயார்.