மட்டன் பிரியாணி
தேவையான பொருட்கள்:
மட்டன் - ஒரு கிலோ
பாஸ்மதி அரிசி - 4 டம்ளர்
வெங்காயம் - 4
தக்காளி - 3
பச்சைமிளகாய் - 2
தயிர் - 3 தேக்கரண்டி
எலுமிச்சைப்பழம் - 1
இஞ்சி, பூண்டு அரவை - 4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா தூல் - 3 தேக்கரண்டி
புதினா தழை - அரை கட்டு
மல்லி தழை - அரை கட்டு
பட்டை(விரல் அளவு) - 3
கிராம்பு - 3
ஏலக்காய் - 4
பிரிஞ்சி இலை - ஒன்று
நெய் - 3 தேக்கரண்டி
எண்ணெய் - 70 மிலி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மட்டனை நன்கு சுத்தம் செய்து கழுவி விட்டு தயிர், சிறிது உப்பு போட்டு வைத்துக் கொள்ளவும்.
வெங்காயம், தக்காளிகளை நறுக்கி வைத்துக் கொள்ளவும். மல்லி, புதினாவை பொடியாக நறுக்கி வைக்கவும். ஒரு குக்கரில் எண்ணெயும், நெய்யில் ஒரு ஸ்பூனும் ஊற்றி சூடு வந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை போட்டு தாளிக்கவும்.
பிறகு நறுக்கின வெங்காயத்தை போட்டு வதக்கி விடவும். நன்கு வதங்கியதும் இஞ்சி,பூண்டு அரவையை போட்டு இரண்டு நிமிடம் வதக்கி விட்டு பிறகு தக்காளி, பச்சைமிளகாய் போட்டு நன்கு வதக்கவும்.
எல்லாம் நன்கு வதங்கியதும், கரம் மசாலாத்தூளில் இரண்டு ஸ்பூனும், மற்ற தூள்களையும் போட்டு ஒரு நிமிடம் வதக்கி விட்டு தயிரில் பிரட்டி வைத்திருக்கும் மட்டனையும், பொடியாக நறுக்கி வைத்திருக்கும் மல்லி, புதினாவில் முக்கால் வாசியும், தேவையான அளவு உப்பு சேர்த்து அப்படியே ஐந்து நிமிடம் வதங்க விடவும்.
பின்பு குக்கரை மூடி ஆறு, ஏழு விசில்கள் வரும்வரை வேக விடவும்.
விசில் வந்ததும் அரிசியை மூன்று முறை களைந்து ஊற விடவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் தம் போடுவதற்கான தண்ணீரை(அதாவது மட்டன் வெந்ததில் தண்ணீர் சிறிது விட்டு இருக்கும்.)அதற்கு ஏற்றார் போல் ஊற்றி(நான் வைத்தது ஐந்தரை டம்ளர்) அந்த சாதத்திற்கு தேவையான உப்பை சேர்த்து அடுப்பில் வைக்கவும்.
கொதி வந்ததும் அரிசியை தண்ணீர் இல்லாமல் வடிக்கட்டி அதில் சேர்த்து மீதமுள்ள மல்லி, புதினா தழைகளை சேர்த்தும், எலுமிச்சைச்சாறு பிழிந்தும் கொதிக்க விடவும்.
தண்ணீர் சுண்டும் நிலையில் மட்டன் மசாலாவை ஊற்றி அதுவும் சாதத்துடன் வற்றும் நேரத்தில் தம் தட்டை அடுப்பில் வைத்து அதன் மேல் சட்டியை வைத்து சாதத்தின் மேல் மீதமுள்ள கரம் மசாலாவையும், நெய்யும் பரவலாக தூவி விட்டு அதன் மேலே வாழை இலையை கழுவி வைத்து அதன் பிறகு மூடியில் அலுமினிய ஃபாயிலுடன் மூடி மேலே வெயிட் வைத்து அடுப்பை சிம்மில் வைத்து பதிந்து நிமிடம் தம் போடவும்.
அதன் பிறகு அடுப்பை அணைத்து விடவும். சுவையான பிரியாணி ரெடி.