பொரித்த வஞ்சிரம் மீன் பிரியாணி
தேவையான பொருட்கள்:
வஞ்சிரம் மீன் - 6 துண்டுகள்
பல்லாரி - 2 பெரியது
தக்காளி - 2 பெரியது
பச்சை மிளகாய் - 4
புதினா தழை - 1 கைபிடியளவு
கொத்தமல்லி தழை - 1 கைபிடியளவு
பிரிஞ்சி இலை - சிறிதளவு
நீளமான குடை மிளகாய் - 1
வத்தல்தூள் - 1 தேக்கரண்டி
மசாலாதூள் - 1 1/2 மேசைக்கரண்டி
சோம்புதூள் - 1/4 தேக்கரண்டி
நச்சீரகதூள் - 1/4 தேக்கரண்டி
மிளகு தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
நெய் - 4 மேசைக்கரண்டி
தயிர் - 2 மேசைக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
கருவா - 2 துண்டுகள்
ஏலம் - 2
கிராம்பு - 2
பாசுமதி அரிசி - 1 கப்
மீன் மசாலா செய்வதற்கு தேவையான பொருட்கள்:
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
சோம்பு தூள் - 1/4 தேக்கரண்டி
நச்சீரக தூள் - 1/4 தேக்கரண்டி
வத்தல் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகு தூள் - 1/4 தேக்கரண்டி
மசாலா தூள் - 1 மேசைகரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - 1/4 தேக்கரண்டி
செய்முறை:
முதலில் மீன் மசாலாசெய்வதற்கு தேவையான பொருட்களை கலந்து வைத்து கொள்ளவும். அதில் மீன் துண்டுகளை போட்டு நன்றாக பிரட்டி 1/2 மணி நேரம் ஊற விடவும். பிறகு எண்ணெய் ஊற்றி பொரித்து எடுத்தது தனியே வைக்கவும்.
அரிசியை உப்பு போட்டு வேக வைத்து அரைவேக்காடாக வடித்து கொள்ளவும் .
பல்லாரி, தக்காளியை நீளவாக்கில் அரிந்து கொள்ளவும்.
குடை மிளகாயை வட்டமாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரில் 4 மேசைக்கரண்டி நெய் ஊற்றி கருவா, ஏலம், கிராம்பு போடவும் .
பின் அரிந்து வைத்துள்ள பல்லாரியை கைப்பிடியளவு போடவும்.
வெங்காயம் லேசாக வதங்கியதும் அரிந்து வைத்துள்ள தக்காளியை கைப்பிடியளவு போடவும். பின்பு இஞ்சி பூண்டு, தயிர் சேர்த்து நன்றாக வதக்கவும்.
கொத்தமல்லி, புதினா இரண்டையும் சிறிதளவு தனியே எடுத்து வைத்து விட்டு மீதி உள்ளதை தாளிப்பில் போடவும். பின் அரிந்து வைத்துள்ள குடை மிளகாயை போடவும். பிரிஞ்சி இலையையும் சேர்த்து நன்றாக தாளிக்கவும்.
மீதி உள்ள பல்லாரி, தக்காளி, நீளவாக்கில் அரிந்த பச்சை மிளகாயையும் போட்டு நன்றாக வதக்கவும். வதங்கியதும் வத்தல் தூள், மசாலா தூள், சோம்பு தூள், நச்சீரக தூள், மிளகு தூள், உப்பு போட்டு நன்றாக வதக்கவும் .
மசாலா வதங்கியதும் மீன் துண்டுகளை போட்டு லேசாக தண்ணீர் தெளித்து குக்கரை மூடி மிதமான தீயில் 10 நிமிடங்கள் வைக்கவும்.
பின் குக்கரில் உள்ள மீன் மசாலாவினை தனியே எடுத்து வைக்கவும்.
மீண்டும் குக்கரில் வேக வைத்த அரிசியினை ஒருஅடுக்கு பரப்பி, அதன் மேல் மீன் மசாலா கிரேவியினை மற்றொரு அடுக்காக பரப்பவும்.
தனியே எடுத்து வைத்த கொத்த மல்லி, புதினா தழைகளை தூவவும் .
மீதியுள்ள அரிசி, மீன் கிரேவியை இதே போன்று அடுக்குகளாக பரப்பி குக்கரை மூடி 10 நிமிடங்கள் மிதமான தீயில் தம்மில் போடவும்.