பெரிய நெல்லிக்காய் பிரியாணி
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - ஒரு கப்
நெல்லிக்காய் - 10
இஞ்சி - சிறு துண்டு
எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கரம்மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்
தனி மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு.
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
நெல்லிக்காய், இஞ்சியை துருவிக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறிக்கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பச்சை மிளகாய், துருவிய நெல்லிக்காய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.
பிறகு கரம்மசாலாத்தூள், தனி மிளகாய்தூள், உப்பு சேர்த்துக் கிளறி ஒன்றரை கப் நீர் விட்டு கொதிக்கவிடவும்.
நீர் நன்கு கொதித்ததும் கழுவிய அரிசியைப் போட்டு நன்றாக கிளறி, குக்கரை மூடவும். ஆவி வந்ததும் `வெயிட்’ போட்டு, அடுப்பை `சிம்’மில் வைத்து 10 நிமிடங்கள் கழித்து இறக்கி, எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லித்தழை சேர்த்துப் பரிமாறவும்.