நெல்லை தம் பிரியாணி





தேவையான பொருட்கள்:
மட்டன் - 1 1/4 கிலோ
பிரியாணி அரிசி - ஒரு கிலோ
எண்ணெய் - 150 மில்லி
நெய் - 150 மில்லி
இஞ்சி பூண்டு விழுது - 3 மேசைக்கரண்டி
ஏலம் - 3
கிராம்பு - 3
பட்டை - 1 துண்டு (கரம் மசாலா பவுடர் போடுவதால், விரும்பினால் சேர்க்கவும்)
கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி (ஏலம், பட்டை, கிராம்பு பொடி)
பச்சை மிளகாய் - 6
சில்லி பவுடர் - 2 தேக்கரண்டி
வெங்காயம் - 300 கிராம்
பழுத்த தக்காளி - 400 கிராம்
தயிர் - 200 மில்லி
எலுமிச்சை - 2(சிறியது)
புதினா - சிறிய கட்டு
மல்லி - சிறிய கட்டு
ஆரஞ்ச் ரெட், லெமன் யெல்லோ கலர் - ஒரு பின்ச்
உப்பு - தேவைக்கு
செய்முறை:
வெங்காயம் மற்றும் தக்காளியை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும். மல்லி, புதினாவை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பிரியாணி அரிசியை தண்ணீரில் ஊற வைக்கவும்.
கறியை சுத்தம் செய்து கழுவி தண்ணீரை வடிகட்டி அதில் தயிர், ஒரு மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, ஒரு தேக்கரண்டி சில்லி பவுடர், உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
அதன் பிறகு குக்கரில் ஊற வைத்திருக்கும் கறியை போட்டு 3 விசில் வரும் வரை வைத்திருந்து இறக்கவும்.
கறி வெந்த பின்பு எடுத்து தனியாக வைக்கவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் 150 மில்லி எண்ணெய், 100 மில்லி நெய் விட்டு காய்ந்ததும் ஏலம், பட்டை, கிராம்பு தாளித்து நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் முழுவதையும் போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கி சிவந்ததும், மீதமுள்ள 2 மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா போட்டு பிரட்டவும். சிம்மில் வைத்து சிறிது நேரம் மூடி திறக்கவும்.
பின்பு அதில் தக்காளி, மிளகாய், மல்லி, புதினா, ஒரு தேக்கரண்டி சில்லி பவுடர், சிறிது உப்பு போட்டு பிரட்டி மூடி போட்டு மசிய விடவும்.
மசிந்ததும் வேக வைத்த மட்டனை சேர்க்கவும். சிறிது நேரம் தீயை மிதமாக வைத்து மூடி வைக்கவும். மட்டன் மூழ்கும் அளவு கிரேவி இருக்க வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் தாராளமாக ஊற்றி கொதி வந்தவுடன் ஊற வைத்த அரிசியை போட்டு முக்கால் அளவு வெந்ததும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். பின்பு மட்டன் மசாலா உள்ள பாத்திரத்தில் வடித்த சாதத்தை கொட்டி சமப்படுத்தி, ஆரஞ்ச் ரெட், லெமன் யெல்லொ கலரை சிறிது நீரில் கரைத்து சாதம் மேல் ஊற்றி விடவும். மீதி உள்ள 50 மில்லி நெய்யை சாதம் மேல் ஊற்றவும்.
பின்பு தம் போடுவதற்கு அலுமினியம் ஃபாயிலை போட்டு பாத்திரத்தில் மூடி அதன் மேல் தட்டு வைத்து மூடி போடவும். சிம்மில் கால் மணி நேரம் வைக்கவும். பாத்திரத்தின் அடியில் பழைய தோசைக்கல் அல்லது ஹீட் டிஃப்யுசர் இருந்தால் வைத்து கால் மணி நேரம் சிம்மில் வைத்திருக்கவும்.
அடுப்பை அணைத்து கால் மணி நேரம் கழித்து திறந்து ஒன்று போல் பிரட்டவும். சாதம் மட்டனுடன் சேர்ந்து வருமாறு பிரட்டவும். சாதம் உடையக்கூடாது. தம் போடுவதால் மட்டனில் உள்ள கிரேவி எல்லாம் சாதம் இழுத்து கொண்டு விடும்.
சுவையான கமகமக்கும் நெல்லை தம் பிரியாணி ரெடி.
குறிப்புகள்:
இதனை தயிர் பச்சடி, தாளிச்சா, ஸ்வீட் உடன் பரிமாறவும்.
இதைப் போல் சிக்கனிலும் செய்யலாம்.