தக்காளி பிரியாணி (2)
தேவையான பொருட்கள்:
பிரியாணி அரிசி – 1 கிலோ கிராம்
தக்காளி – 1 கிலோ
கிராம் பச்சைப் பட்டாணி – ½ கிலோ கிராம்
பெரிய வெங்காயம் – 2 (பெரியது)
பச்சை மிளகாய் – 5
இஞ்சி-பூண்டு விழுது – 2 ஸ்பூன்
வத்தல் பொடி – 1 ஸ்பூன்
சீரகப் பொடி – 1 ஸ்பூன்
தனியா பொடி – 2 ஸ்பூன்
தேங்காய் – ½ மூடி
சின்ன வெங்காயம் – 10
கொத்தமல்லி – ¼ கட்டு
எண்ணைய் – 3 மேஜைக் கரண்டி
நெய் – 2 மேஜைக் கரண்டி
உப்பு - தேவையான அளவு.
-------------------------------
தாளிக்க
--------------------------------
கிராம்பு – 3
சீரகம் – சிறிதளவு
பட்டை – சிறிதளவு
பெருஞ்சீரகம் – சிறிதளவு
செய்முறை:
முதலில் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை நீளவாக்கில் அரிந்து கொள்ளவும். தக்காளியை விழுதாக அரைத்துக் கொள்ளவும். தேங்காய், சின்ன வெங்காயத்தை தனித்தனியே விழுதாக்கிக் கொள்ளவும். கொத்த மல்லியை சுத்தமாக்கி பொடியாக அரிந்து கொள்ளவும்.
பிரியாணி அரிசியை பத்து நிமிடம் ஊறவ வைக்கவும். குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்தவுடன் பட்டை, கிராம்பு, பெருஞ்சீரகம், சீரகம் ஆகியவற்றைச் சேர்க்கவும். பின் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
இஞ்சிப் பூண்டு விழுது, சின்ன வெங்காய விழுது மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும். அரைத்த தக்காளி விழுதினைச் சேர்த்து வதக்கவும். பின் அதனுடன் வத்தல் பொடி, சீரகப் பொடி, தனியா பொடி ஆகியவற்றைச் சேர்த்து எண்ணெய் தெளியும் வரை வதக்கவும்.
பின் அதனுடன் பச்சை பட்டாணி, தேங்காய் விழுது, அரிந்த கொத்தமல்லி சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து (இரு மடங்கு) கொதிக்க விடவும்.
நன்கு கொதித்த பின்னர் ஊற வைத்த பிரியாணி அரிசியைச் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடவும். ஒரு விசில் வந்தவுடன் 2 நிமிடம் சிம்மில் வைத்து அடுப்பை அணைத்து விடவும். சுவையான தக்காளி பிரியாணி தயார்.