சோயா கோலா பிரியாணி
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - 2 கப்
வெங்காயம், தக்காளி - தலா 3
பச்சை மிளகாய் - 5
இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
புதினா, கொத்தமல்லித்தழை - தலா ஒரு கைப்பிடி அளவு
பட்டை - சிறு துண்டு
லவங்கம், ஏலக்காய் - தலா ஒன்று
தேங்காய்ப்பால் - 2 கப்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
எண்ணெய், நெய் - தேவையான அளவு.
உப்பு - தேவையான அளவு.
---------------------------------
சோயா கோலாவுக்கு:
---------------------------------
சோயா உருண்டைகள் - 20
பொட்டுக்கடலை - அரை கப்
பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் - தலா 2
பெருஞ்சீரகம் - அரை டீஸ்பூன்
இஞ்சி - ஒரு சிறு துண்டு
பூண்டு - 6 பல்
மிகவும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி அளவு
தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு.
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
சோயா கோலா செய்ய:
சோயா கோலா செய்யக் கொடுக்கப்பட்ட பொருட்களில், சோயா உருண்டைகளை கொதி நீரில் போட்டு, 5 நிமிடம் கழித்து எடுத்து, குளிர்ந்த நீரில் அலசி, நீரை ஒட்டப்பிழிந்து, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்.
பொட்டுக்கடலையை மிக்ஸியில் பொடிக்கவும்.
பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், பெருஞ்சீரகம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.
எண்ணெய் நீங்கலாக மற்ற எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து நன்கு பிசைந்து குட்டி குட்டி உருண்டைகளாக உருட்டி, காயவைத்த எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
பிரியாணி செய்ய:
பிரியாணி செய்யக் கொடுக்கப்பட்ட பொருட்களில் வெங்காயம், தக்காளியை நீளநீளமாக மெல்லியதாக நறுக்கவும். பச்சை மிளகாயை கீறிக்கொள்ளவும். புதினா, கொத்தமல்லித்தழையை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றியெடுக்கவும்.
பாசுமதி அரிசியை நன்கு கழுவி தேங்காய்ப்பால், ஒன்றரை கப் நீர் சேர்த்து 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு தக்காளி, இஞ்சி - பூண்டு விழுது, புதினா, கொத்தமல்லித்தழை, மஞ்சதூள், உப்பு சேர்த்து வதக்கி, அதில் ஊறவைத்த அரிசியை பாலுடன் சேர்த்து நன்கு கலந்து, குக்கரை மூடி, ஆவி வந்ததும் `வெயிட்’ போட்டு, அடுப்பை `சிம்’மில் வைத்து, 10 நிமிடங்கள் கழித்து இறக்கவும்.
பிரியாணியை திறந்ததும் நன்றாக கிளறி சோயா கோலா உருண்டைகளை சேர்த்து, உடையாமல் கிளறினால்... சோயா கோலா பிரியாணி ரெடி. கேரட் ராய்த்தா, தயிர் - ஆனியன் பச்சடி இதற்கு சரியான காம்பினேஷன்.