செட்டிநாட்டு சிக்கன் பிரியாணி (1)

on on on on off 2 - Great!
4 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி - 1 1/2 கப்

கோழி - 1/2 கிலோ

வெங்காயம் - ஒன்று

தக்காளி - ஒன்று

பச்சை மிளகாய் - 5

இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி

தேங்காய் பால் - 1 1/2 கப்

தண்ணீர் - 1 1/2 கப்

கொத்தமல்லி, புதினா - 1/2 கப்

தயிர் - 1/2 கப்

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி

கரம் மசாலா தூள் - 1/4 தேகரண்டி

பட்டை - சிறுத் துண்டு

லவங்கம் - 5

பிரியாணி இலை - ஒன்று

ஏலக்காய் - 3

எண்ணெய் - 100 மில்லி

நெய் - 3 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் கோழியை எலும்புடன் சேர்த்து பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நறுக்கின கோழி துண்டுகளை போட்டு பாதியளவு தயிர், மஞ்சள் தூள், பாதியளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு ஊற வைக்கவும்.

வெங்காயத்தை தோல் உரித்து பெரிய துண்டுகளாக நறுக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். அரிசியை கழுவி 20 நிமிடம் ஊற வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் 2 தேக்கரண்டி நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, பிரியாணி இலை, ல்வங்கம், ஏலக்காய் போட்டு பொரிய விடவும்.

அதன் பிறகு நறுக்கின வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வதக்கவும்.

வெங்காயம், பச்சை மிளகாய் பாதியளவு வதங்கியதும் அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை அடங்கியதும் நறுக்கின தக்காளியை சேர்த்து நன்கு குழையும் அளவிற்கு வதக்கவும்.

பின்னர் மீதமிருக்கும் தயிர், மிளகாய் தூள், மீதமுள்ள உப்பு, கொத்தமல்லி தழை, புதினா சேர்த்து கிளறி விட்டு 3 நிமிடம் வைத்திருக்கவும்.

நன்கு எல்லாம் சேர்ந்து மிளகாய் வாசனை போனதும் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து கிளறி விட்டு வேக வைக்கவும்.

கோழி வெந்ததும் தேங்காய் பால் மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். கொதி வந்ததும் ஊற வைத்த அரிசியை போட்டு மூடி போட்டு முக்கால் பதம் வேக விடவும்.

பிறகு வெந்ததும் அதன் மேல் கரம் மசாலா தூள் தூவி ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து சிறுதீயில் வைத்து 10 - 15 நிமிடங்கள் தம்மில் போடவும். சாதம் நன்கு முழுவதுமாக வெந்ததும் இறக்கி வைக்கவும். சுவையான செட்டிநாடு கோழி பிரியாணி தயார்.

குறிப்புகள்:

ஆனியன் ரைய்தாவுடன் பரிமாறவும்.