சிம்பிள் சோயா பிரியாணி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சை அரிசி - 2 டம்ளர்

சோயா - 100 கிராம்

பச்சை மிளகாய் - 6

முழுப்பூண்டு - ஒன்று

இஞ்சி - இரண்டு அங்குல அளவு

பட்டை - சிறிது

கிராம்பு - 6

எண்ணெய் - 4 கரண்டி

கொத்தமல்லி - மேலே தூவுவதற்கு சிறிது

உப்பு - 5 தேக்கரண்டி

செய்முறை:

பூண்டினை தோல் உரித்து கொள்ளவும். இஞ்சியை தோல் நீக்கி அரைப்பதற்கு இலகுவாக நறுக்கிக் கொள்ளவும். அரிசியை நீர் விட்டு களைந்து சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.

பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், பட்டை, கிராம்பு அனைத்தையும் ஒன்றாய் சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸியில் அல்லது அம்மியில் இட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுது அரை கப் அளவு இருக்கும். படத்தில் இருப்பது க்ளோசப் ஷாட்டில் எடுத்தது. பெரிய பாத்திரம் போல் தெரிகின்றது.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்தவுடன் அதில் சோயாவைப் போட்டு, 2 தேக்கரண்டி உப்பு போட்டு 2 நிமிடம் வேக விடவும். வெந்தவுடன் சோயாவை எடுத்து ஆறவைத்து பிறகு நீரை பிழிந்து விடவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்த விழுதைப் போட்டு சில நொடிகள் வதக்கவும். பச்சை வாடை சற்று போனவுடன் வேகவைத்து எடுத்து வைத்துள்ள சோயாவை அதில் சேர்த்து சிறிது நேரம் நன்கு வதக்கவும்.

இரண்டு டம்ளர் அரிசிக்கு 4 டம்ளர் நீர் எடுத்து குக்கரில் ஊற்றி, அரிசியையும், வதக்கின சோயா கலவையையும் அதில் போடவும். அத்துடன் மீதமுள்ள 3 தேக்கரண்டி உப்பையும் சேர்த்து சற்று கிளறிவிட்டு, குக்கரை மூடி வேக விடவும். ஒரு டம்ளர் தண்ணீரைக் குறைத்துக் கொண்டு மாற்றாக ஒரு டம்ளர் தேங்காய் பால் சேர்க்கலாம்.

குக்கரில் இரண்டு அல்லது மூன்று விசில் வந்தவுடன் இறக்கி, ஆவி அடங்கியவுடன் எடுத்து, விரும்பினால் சிறிது நெய்விட்டுக் கிளறி, சிறிது கொத்தமல்லி தழையினை மேலேத் தூவவும். எளிதான, சுவையான சோயா பிரியாணி தயார்!

குறிப்புகள்:

இதற்கு வெங்காயப் பச்சடி, தேங்காய் துவையல், வெஜிடபிள் குருமா, தக்காளி சாஸ் என்று பலவித பக்க உணவுகள் பொருத்தமாய் இருக்கும்.

இந்த செய்முறையை வழங்கியவர். திருமதி. இந்திரா. மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர். சமையலில் அனுபவம் மிகுந்த இல்லத்தரசி.