சிக்கன் பிரியாணி (5)
தேவையான பொருட்கள்:
சிக்கன் - கால் கிலோ
அரிசி - 2 கப்
பெரிய வெங்காயம் - 5
தக்காளி - 5
பச்சை மிளகாய் - 10
தேங்காய் துருவல் - கால் கப்
கசகசா - ஒரு தேக்கரண்டி
முந்திரி - 15
கொத்தமல்லித் தழை - 2 கொத்து
இஞ்சி, பூண்டு விழுது - 3 மேசைக்கரண்டி
சாஜீரா - அரை தேக்கரண்டி
பட்டை - 2 துண்டு
கிராம்பு - 3
ஏலக்காய் - 2
தயிர் - அரை கப்
மிளகாய் தூள் - அரை மேசைக்கரண்டி
கறி மசாலா தூள் - ஒரு மேசைக்கரண்டி
பச்சை பட்டாணி - கால் கப்
பன்னீர் - ஒரு மேசைக்கரண்டி
மஞ்சள் கலர் பவுடர் - கால் தேக்கரண்டி
சிவப்பு கலர் பவுடர் - 2 சிட்டிகை
நெய் - ஒரு மேசைக்கரண்டி
தூள் உப்பு - கால் தேக்கரண்டி
கல் உப்பு - அரை மேசைக்கரண்டி + ஒரு தேக்கரண்டி
செய்முறை:
பெரிய வெங்காயத்தை தோல் உரித்து நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைத்துக் கொள்ளவும். கொத்தமல்லித் தழையை ஆய்ந்து தண்ணீரில் அலசிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கோழியை கழுவி சுத்தம் செய்து பெரிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். அதனுடன் கறி மசாலா தூள், ஒரு மேசைக்கரண்டி கல் உப்பு போட்டு நன்கு பிரட்டி அதில் தயிரை ஊற்றி 10 நிமிடம் ஊற வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் கால் கப் + ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய மூன்று வெங்காயத்தை போட்டு நன்கு சிவக்க கருகவிடாமல் மொறுமொறுவென்று 7 நிமிடம் பொரித்து எண்ணெயை வடித்து எடுத்துக் கொள்ளவும்.
மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றாமல் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சாஜீரா போட்டு 30 நொடி வறுத்து எடுத்து அம்மியில் வைத்து பொடி செய்துக் கொள்ளவும். வறுத்து எடுத்த வெங்காயத்தில் பொடியை போட்டு கலந்துக் கொள்ளவும்.
வெங்காயம் வதக்கிய அதே பாத்திரத்தில் நறுக்கிய 2 வெங்காயத்தை போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் அதில் மிளகாய் தூள், இஞ்சி, பூண்டு விழுது போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். பச்சை வாசனை போனதும் தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி போட்டு 3 நிமிடம் வதக்கவும்.
3 நிமிடம் கழித்து ஊற வைத்த கறியை போட்டு கால் கப் தண்ணீர் ஊற்றி பச்சை பட்டாணி போட்டு கால் தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கிளறி தீயை குறைத்து வைத்து மூடி விடவும். 15 நிமிடம் கழித்து திறந்து கிளறி மீண்டும் மூடி விடவும்.
தேங்காய், கசகசா இரண்டையும் மிக்ஸியில் போட்டு கால் கப் தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும். பிறகு 5 நிமிடம் கழித்து அரைத்து வைத்திருக்கும் தேங்காய், கசகசா விழுது போட்டு கிளறி மூடி விடவும்.
ஒரு பாத்திரத்தில் அரிசியை போட்டு தண்ணீர் ஊற்றி களைந்து 15 நிமிடம் ஊற வைக்கவும். ஒரு பானையில் முக்கால் அளவு தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் ஊற வைத்த அரிசியை போட்டு ஒரு தேக்கரண்டி கல் உப்பு, மஞ்சள் கலர் பவுடர் போட்டு வேக விடவும். அரிசி வெந்ததும் வடித்துக் எடுத்துக் கொள்ளவும்.
தேங்காய், கசகசா விழுது போட்டு 5 நிமிடம் கழித்து வடித்த சாதத்தை போட்டு நன்கு கிளறி விடவும். அதன் மேலே வறுத்து எடுத்த வெங்காயத்தை போட்டு மூடி விடவும்.
பிறகு ஒரு வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரியை போட்டு வறுத்து சாதத்துடன் போடவும். பன்னீரில் கலர் பவுடரை போட்டு கரைத்து பிரியாணியில் ஊற்றி கலந்துக் கொள்ளவும்.
அதன் பிறகு மூடி போட்டு ஒரு நிமிடம் கழித்து திறந்து எல்லாம் ஒன்றாக சேரும்படி நன்கு கிளறி அடுப்பில் இருந்து இறக்கி வைத்து விடவும்.