சிக்கன் பிரியாணி (3)
தேவையான பொருட்கள்:
சீரகச் சம்பா அரிசி - 3 கப்
பெரிய துண்டுகளாக நறுக்கிய சிக்கன் - அரை கிலோ
சிறிய துண்டுகளாக நறுக்கிய சிக்கன் - 150 கிராம்
நறுக்கிய உருளைக்கிழங்கு - ஒன்று (பெரியது)
பெரிய வெங்காயம் - கால் கிலோ
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிதளவு
தயிர் - அரை கப்
தேங்காய்ப்பால் - ஒரு கப்
புதினா - ஒரு கட்டு
கொத்தமல்லித் தழை - ஒரு கட்டு
இஞ்சி, பூண்டு - தலா 25 கிராம்
பிரியாணி மசாலா தூள் - 3 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரைத் தேக்கரண்டி
ஃபுட் கலர் - அரைத் தேக்கரண்டி
ஏலம் - 2
கிராம்பு - 3
பட்டை - ஒரு துண்டு
ஜாதிக்காய் - ஒரு துண்டு (கால் பாகம்)
எண்ணெய் - 5 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெறும் வாணலியில் ஏலம், கிராம்பு, பட்டை மற்றும் ஜாதிக்காயை வாசம் வரும் வரை வறுத்து இஞ்சி, பூண்டுடன் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், 2 தக்காளி ஆகியவற்றை நறுக்கி வைக்கவும். புதினா மற்றும் கொத்தமல்லித் தழையை சுத்தம் செய்து வைக்கவும்.
சிறிய துண்டுகளாக நறுக்கிய சிக்கனுடன் அரைத் தேக்கரண்டி அளவு அரைத்த இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்புச் சேர்த்து கலந்து ஒரு மணித்தியாலங்கள் ஊறவைக்கவும். பெரிய துண்டுகளாக நறுக்கிய சிக்கனுடன் மீதமுள்ள இஞ்சி, பூண்டு விழுது, தயிர், கரம் மசாலா தூள், கால் தேக்கரண்டி ஃபுட் கலர், தேவையான அளவு உப்புச் சேர்த்து கலந்து 3 மணித்தியாலங்கள் ஊறவைக்கவும்.
புதினா மற்றும் கொத்தமல்லித் தழையுடன் மீதமுள்ள ஒரு தக்காளியைச் சேர்த்து விழுதாக அரைத்து வைக்கவும்.
உருளைக்கிழங்கு மற்றும் சிறிய துண்டுகளாக நறுக்கி ஊறவைத்த சிக்கன் ஆகியவற்றைப் பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
அரிசியை சுத்தம் செய்து 2 தேக்கரண்டி அளவு அரைத்து வைத்துள்ள புதினா, கொத்தமல்லித் தழை விழுது, தேங்காய்ப்பால், 4 கப் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்புச் சேர்த்து முக்கால் பதமாக வேகவிட்டு சாதத்தை எடுத்துக் கொள்ளவும். (அரிசியை ஊற வைக்கத் தேவையில்லை. ரைஸ் குக்கர் (அ) ஃப்ரஷர் குக்கரில் சாதத்தை வேகவிடவும்).
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியதும் மீதமுள்ள புதினா, கொத்தமல்லித் தழை விழுது சேர்த்து எண்ணெய் பிரிய வதக்கவும்.
பிறகு பெரிய துண்டுகளாக நறுக்கி ஊறவைத்த சிக்கனைச் சேர்த்து 10 நிமிடங்கள் வதக்கி பிரியாணி மசாலா தூள் சேர்த்து மிதமான தீயில் வைத்து மூடிபோட்டு வேகவிடவும். (தண்ணீர் சேர்க்க வேண்டாம். சிக்கனில் உள்ள தண்ணீரிலேயே வேகவிடவும்).
சிக்கன் வெந்து எண்ணெய் பிரிந்து கிரேவி பதம் வந்ததும் உப்பு சரிபார்த்து இறக்கி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் சிறிது சாதத்தை பரவலாகப் போட்டு, அதன்மீது சிறிதளவு சிக்கன் கிரேவியை பரவலாக வைக்கவும்.
இதேபோல் சிறிது சாதம், சிறிது கிரேவி என மாற்றி மாற்றி போடவும். (மேலே சாதம் வருமாறு முடிக்கவும்). அதன்மேல் மீதியுள்ள ஃபுட் கலரைக் கரைத்து ஊற்றி பொரித்த சிக்கன் மற்றும் உருளைக்கிழங்கை பரவலாக வைத்து இறுக மூடி, அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அதன்மீது இந்த பாத்திரத்தை வைத்து 20 நிமிடங்கள் தம்மில் வைத்தெடுத்து கவனமாகக் கிளறிவிடவும். (சாதத்துடன் கிரேவியைக் கலந்து கொண்டும் தம்மில் வைக்கலாம்). சூடான, சுவையான சிக்கன் பிரியாணி தயார்.
குறிப்புகள்:
தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.