சிக்கன் பிரியாணி (11)
தேவையான பொருட்கள்:
கோழிக்கால் - ஒரு கிலோ
பாசுமதி அரிசி - 750 கிராம்
வெங்காயம் - 3
பச்சை மிளகாய் - 5
புதினா இலை - ஒரு கட்டு
கொத்தமல்லி இலை - 1/2 கட்டு
தக்காளி - ஒன்று
முழுப்பூண்டு - ஒன்று
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
கரம் மசாலா பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி
எக்ஸ்ரா ஹாட் பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி
பிரியாணி பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி
தக்காளிப் பேஸ்ட் - 2 மேசைக்கரண்டி
ஏலக்காய் - 4
கறுவா (பட்டை) - ஒரு துண்டு
கிராம்பு - 4
கடுகு - 1/2 தேக்கரண்டி
பெருஞ்சீரகம் - ஒரு தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1 (அல்லது) 1 1/2 மேசைக்கரண்டி
எண்ணெய், வெண்ணெய் அல்லது நெய் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கோழிக்காலை நான்கு துண்டுகளாக வெட்டி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி ஆகியவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும். புதினா, கொத்தமல்லி இலைகளை சுத்தம் செய்து அலசி வைக்கவும். பூண்டு மற்றும் இஞ்சியின் தோலை நீக்கி வைக்கவும்.
அரிசி மற்றும் மசாலாப் பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். பாசுமதி அரிசியை 30 நிமிடம் தண்ணீரில் ஊறவிடவும். பிறகு அரிசியை முக்கால் பதத்திற்கு சாதமாக வடித்து எடுத்துக் கொள்ளவும்.
சுத்தம் செய்து வைத்திருக்கும் புதினா, கொத்தமல்லி இலைகள் மற்றும் இஞ்சி, பூண்டு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு வெடித்ததும், அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் பெருஞ்சீரகம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் கோழியை சேர்த்து 3 நிமிடம் வதக்கவும். பிறகு அதில் உப்பு, தக்காளிப்பழம் சேர்த்து கிளறி விட்டு மூடி வைத்து 5 நிமிடம் வேகவிடவும்.
5 நிமிடம் கழித்து அரைத்த கொத்தமல்லி, புதினா விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போக 3 நிமிடம் வதக்கவும். அடுத்து தக்காளி விழுது, மிளகாய்த்தூள், பச்சைமிளகாய் சேர்த்து மேலும் 2 நிமிடம் வதக்கவும். பிறகு அதில் 3 கப் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து கொதிக்க விடவும்.
கொதி வந்ததும் அதில் கரம் மசாலா பேஸ்ட், பிரியாணி பேஸ்ட், எக்ஸ்ரா ஹாட் பேஸ்ட் சேர்த்து மூடி வேகவிடவும். கோழி நன்கு வெந்ததும் குழம்பாக இருக்கும்பொழுது இறக்கி வைத்துவிடவும்.
ஒரு பெரிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெண்ணெய் அல்லது நெய் சேர்த்து அது உருகியதும் முதலில் சாதத்தைப் போடவும்.
அதன் மேல் இறக்கிவைத்திருக்கும் சிக்கன் குழம்பு கறியை விடவும். மீண்டும் அதன் மேல் சாதத்தை போட்டு அடுத்து குழம்பு கறி என்று இதுப்போல் மாறிமாறி செய்யவும்.
பிறகு ஒரு முறை சாதத்தை கிளறி மூடி வைத்து அடுப்பை சிம்மில் விடவும். ஐந்து நிமிடம் கழித்து பிறகு இறக்கவும்.
குறிப்புகள்:
மேலே குறிப்பிட்டது போல் கறியை வைத்து எல்லாப் பேஸ்ட்டுக்களும் சேர்த்த பின்பு அரிசியைப் போட்டு மூடி வேகவைத்தும் சமைக்கலாம்.