சாமை அரிசியில் சத்தான பிரியாணி
தேவையான பொருட்கள்:
சாமை அரசி - 1 கப் (200 கிராம்)
பூண்டு - 8 பல்
இஞ்சி துண்டு - 2 அங்குல
பச்சை மிளகாய் - 5
தயிர் - கால் கப்
புதினா - ஒரு கைப்பிடி
மல்லி - ஒரு கைப்பிடி
கேரட், பீன்ஸ், குடை மிளகாய், நூக்கல், உருளை, பச்சை பட்டாணி போன்ற காய்கறிகள் - தேவையான அளவு (காய்கறிகளுடன் மஷ்ரூம், பனீர் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்)
வெங்காயம் - 2
தக்காளி - 2
பட்டை இலை - சிறிதளவு
எண்ணெய் மற்றும்
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
இஞ்சி, பூண்டு மற்றும் மிளகாயை நன்கு விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
சாமை அரிசியை நன்கு கழுவி, 1½ கப் தண்ணீர் விட்டு ஊற வைக்க வேண்டும்.
குக்கரில் எண்ணெய் மற்றும் சிறிது நெய் சேர்த்து காய்ந்த பின் பட்டை மற்றும் பிரிஞ்சி இலையை போட்டு சிவந்தவுடன் அதில் வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
வெங்காயம் லேசாக சிவந்தவுடன் அதில் இஞ்சி பூண்டு விழுதையும், புதினாவையும் சேர்த்து வதக்க வேண்டும்.
இஞ்சி பூண்டின் பச்சை வாசனை போனவுடன் அதில் கொத்தமல்லி சேர்த்து பின்பு காய்கறிகளை சேர்த்து லேசாக வதக்க வேண்டும்.
மேலும் இவற்றுடன் தக்காளி தயிர் சேர்த்து மீண்டும் வதக்க வேண்டும்.
பின்பு சிறிது மஞ்சள் தூள், உப்பு சேர்த்து ஊற வைத்த அரிசியை அதில் சேர்க்க வேண்டும்.
ஒரு கப் சாமைக்கு ஒன்றரை கப் தண்ணீர் போதுமானது. எனவே நாம் வதக்கிய காய்கறிகளில் தண்ணீர் இருக்குமானால் அந்தளவு தண்ணீரை அரிசியில் இருந்து வடித்து விட வேண்டும்.
அரிசியை போட்ட பின் அடுப்பை முழுதாக வைத்து கொதிக்க ஆரம்பித்தவுடன் அடுப்பை சிம்மில் வைத்து குக்கரை மூடி விட வேண்டும். ஆனால் வெயிட் வைக்கக்கூடாது. 15 முதல் 20 நிமிடம் ஆன பின் அடுப்பை அணைத்து லேசாக கிளறி விட வேண்டும்.
சாமை பிரியாணி இப்பொழுது சாப்பிட தயாராக இருக்கும்.
குறிப்புகள்:
இதற்கு தொட்டுக் கொள்ள வழக்கமாக பிரியாணியுடன் சாப்பிடும் தயிர் வெங்காயம் பச்சடி போன்ற எதையும் வைத்துக் கொள்ளலாம்.
வழக்கமான அரிசி பிரியாணியை விட இது வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.
சாமை மிகச்சிறிய அளவில் இருக்கும் என்பதால் பிரியாணி உதிர்வதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் சாப்பிடும் போது அதன் சுவையுடன் ஒப்பிடுகையில் அது ஒரு குறையாக தெரியாது.