கோபி பிரியாணி
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - 2 கப்
காலிஃப்ளவர் (மீடியம் சைஸ்) - ஒன்று
பெரிய வெங்காயம் - 2
நாட்டுத் தக்காளி - 4
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - 8 பல்
தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
பட்டை - சிறு துண்டு
லவங்கம், ஏலக்காய் - தலா ஒன்று
கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி அளவு
தனி மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
நெய், எண்ணெய் - தேவையான அளவு.
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
காலிஃப்ளவரை நன்கு சுத்தம் செய்து, துண்டுகளாக்கவும்.
வெங்காயத்தை நீள நீளமாக மெல்லியதாக நறுக்கவும்.
தக்காளியை மிகவும் பொடியாக நறுக்கவும்.
இஞ்சி, பூண்டு, தேங்காய்த் துருவல், லவங்கம், ஏலக்காய், கொத்தமல்லித்தழை ஆகியவற்றை மிக்ஸியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும். பச்சை மிளகாயை கீறிக்கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
பிறகு, தனி மிளகாய்த்தூள், அரைத்த மசாலா விழுது, காலிஃப்ளவர் துண்டுகள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி, மூன்றரை கப் நீர் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
நன்றாக கொதித்ததும் கழுவிய அரிசியைப் போட்டுக் கிளறி குக்கரை மூடவும். ஆவி வந்ததும் `வெயிட்’ போட்டு, அடுப்பை `சிம்’மில் வைத்து, 10 நிமிடங்கள் கழித்து இறக்கி, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.